Published : 24 Mar 2019 06:54 AM
Last Updated : 24 Mar 2019 06:54 AM

சிவகங்கை காங். வேட்பாளர் தேர்வில் இழுபறி

‘வாரிசுகளுக்கு சீட் இல்லை’ என்றுடெல்லி காங்கிரஸ் மேலிடம் கூறிவரும் நிலையில், சிவகங்கையை தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்கியே ஆகவேண்டும் என்று ப.சிதம்பரம் விடாப்பிடியாக வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனாலேயே அத்தொகுதி வேட்பாளர் அறிவிப்பு இழுபறி ஆவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் நேற்று முன்தினம் இரவு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத்தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்தகே.எஸ்.அழகிரி, ‘‘தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும்’’ என்றார். அவர் இப்படி கூறிய சில மணி நேரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது டெல்லி காங்கிரஸ் தலைமை.

அந்த பட்டியலில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் இல்லை.

வழக்கமாக ஒருசில தொகுதிகளை தனது விசுவாசிகளுக்கு ஒதுக்க வைப்பார் ப.சிதம்பரம். இந்த முறை தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்காக சிவகங்கையை மட்டும் கேட்டு தக்கவைத்துக் கொண்டார்.

ஆனாலும், பிடி இறுகும் வழக்குவிவகாரங்களின் காரணமாக கார்த்திக்கு இந்த முறை சீட் கிடைப்பது சிரமம்தான் என்ற செய்தி பலதரப்பிலும் பரப்பப்பட்டது.

இப்படியொரு செய்தி பரவத் தொடங்கியதுமே மற்ற யாரும் போட்டிக்கு வந்துவிடக் கூடாது என்று, ‘சிவகங்கையில் ராகுல் காந்தி போட்டி’ என்ற செய்தியை கார்த்தி தரப்பில் இருந்தே சிலர் பரப்பினர்.

கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று கட்சியின் துணை அமைப்புகளின் பொறுப்பாளர்களிடம் கார்த்தி விசுவாசிகளே சில நாட்களுக்கு முன்பு அவசரமாக கடிதமும் எழுதி வாங்கினர். சக்தி செயலி வழியாகவும் பலர் இக்கருத்தை பதிவு செய்தனர்.

விருப்ப மனு அளிக்க தயக்கம்

கார்த்திக்காக சிதம்பரம் இவ்வளவு மெனக்கெடுவதால் சிவகங்கைக்காக விருப்ப மனு கொடுக்கக்கூட காங்கிரஸார் தயங்கினர்.ஆனாலும், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட ஒரு சிலர் மனு கொடுத்தனர். நாச்சியப்பனுக்கு ஆதரவாக திருநாவுக்கரசரும் களத்தில் இறங்கினார்.

ஆனால், ‘மாணிக் தாகூருக்கு சீட் கொடுத்தால், அவரது சித்தப்பாவான நாச்சியப்பனுக்கு நிச்சயம் சீட் தரமாட்டார்கள்’ என்று சிதம்பரம் தரப்பில் கூறப்பட்டு வந்தது. ‘அரசர், தாகூர், நாச்சியப்பன் என முக்குலத்தோர் சமூகத்தில் 3 பேருக்கு சீட்கொடுப்பீர்களா?’ என டெல்லி தலைமையிடம் சிதம்பரம் தரப்பில்இருந்து கேள்வி எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த இழுபறிக்கு நடுவே, கமல்நாத் உள்ளிட்ட மேலும் சில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்கு எம்.பி. சீட் கேட்க, ‘‘ஏற்கெனவே பதவியில் இருக்கும் தலைவர்களின் வாரிசுகளுக்கு எம்.பி. சீட் இல்லை’’ என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியதாகவும் தெரிகிறது.அந்த பட்டியலில் கார்த்தியும் வருவதால் சிவகங்கை வேட்பாளரை இறுதிசெய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

பட்டியலிட்ட சிதம்பரம்

‘சிவகங்கைக்கு நீங்களே 3 பெயர்களை எழுதிக் கொடுங்கள்’ என்று ப.சிதம்பரத்திடமே ராகுல் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இதுதான் சரியான வாய்ப்பென்று, ‘1. கார்த்தி சிதம்பரம் 2. காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் 3. காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி’ என்று சிதம்பரம் பட்டியலிட்டதாக தெரிகிறது.

இவர்களைத் தவிர்த்து, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜின் மகனான டாக்டர் அருணின் பெயரும் பட்டியலில் அடிபடுகிறது. சிதம்பரம் தரப்பில் கூறப்படும் இந்த தகவல்களை ஒட்டுமொத்தமாக மறுக்கிறது சுதர்சன நாச்சியப்பன் தரப்பு. ‘‘வேட்பாளர் பரிசீலனையில் கார்த்தி சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் 2 பேரின் பெயர்கள் மட்டுமே இருக்கின்றன’’ என்கின்றனர் அவர்கள்.

அமேதிக்கு அடுத்தபடியாக சிவகங்கையில் ஏன் ராகுல் காந்தியே நிற்கக்கூடாது? என்ற பேச்சும் காங்கிரஸார் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

யார்தான் சிவகங்கை வேட்பாளர்? நாளைக்குள் தெளிவாகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x