Last Updated : 23 Mar, 2019 11:25 AM

 

Published : 23 Mar 2019 11:25 AM
Last Updated : 23 Mar 2019 11:25 AM

வளைகுடா வாழ் தமிழர்களைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு; தேர்தல் அறிக்கையிலாவது இடம்பெறுமா?- வேதனையில் தொழிலாளர்கள்

இந்திய நிகழ்வுகளை இந்தியாவில் வாழும் இந்தியர்கள் எந்த அளவுக்கு கூர்ந்து நோக்குகிறார்கள் என்பது தெரியாது. ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து நோக்கியே வருகின்றனர்.

இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் சாதி மதத்தின் பெயரால் மக்கள் பிரித்தாளப்படுவதை தூரத்திலிருந்து பார்க்கும் இந்தியர்களின் மனது வலிக்கிறது.  விமானம் ஏறிய பின்பு சாதி மதம் கடந்து இந்தியன் என்ற ஒற்றை வார்த்தையில் இணைந்து தேசத்திற்காக பரிந்துபேசும் இந்தியர்கள், நாட்டில் நடக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை வேதனையுடன் பார்க்கின்றனர். மனிதர்களைப் பிரித்தாளுவது அயோக்கியத்தனம் என்பதே நிதர்சனம்.

ஒரே ஊரில் இருப்பவன், ஒரே தெருக்காரனைப் பாசத்துடன் பார்ப்பதும், ஜில்லாவின் தலைநகரில் வாழும்போது, ஒரே தாலுக்காவைச் சேர்ந்தவனை நேசத்தோடு சந்திப்பதும், மாநிலத் தலைநகரில் வாழும்போது, ஒரே மாவட்டத்துக்காரனை  அன்போடு அரவணைப்பதும் தேசத்தின் தலைநகரில் வாழ்பவர்கள் ஒரே மாநிலத்துக்கார இணைந்து கொள்வதுமான அன்பும் பரிவும் தேசத்தைப் பிரிந்து வாழ்பவர்களுக்குத்தான் தெரியும்.

வெளிநாட்டில் வாழ்பவர்கள்தான் தாயகத்தின் உள்ள மக்களுக்காக தங்கள் பணத்தை வாரிஇறைப்பதும், கிராம நலனுக்காக செலவழிப்பதும் நடக்கிறது. பல ஊர்களில் அரசுப் பள்ளிகளுக்கு  வெளிநாட்டுவாழ் இந்தியா்கள் உதவி வருகிறார்கள் என்பது உண்மை.

தற்போது நடைபெற உள்ள இந்திய தேர்தல் குறித்தும், தமிழக அரசியல் குறித்தும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் குறிப்பாக துபாய் உள்ளிட்ட வளைகுடாவாழ் தமிழர்கள் பல கனவுகளை கண்டு கொண்டு உள்ளார்கள்.

இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளில் வாழ்பவர்களைவிட வளைகுடாவில் வாழ்பவர்களுக்குத்தான் இந்திய அரசியல் குறித்த ஆழமும் அவசியமும் உண்டு. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசியல் கட்சிகளின் செயல்பாடு குறித்து அக்கறை இல்லை. காரணம் அவர்கள். இந்திய குடியுரிமைக்குரிய பாஸ்போர்ட்டை சமர்ப்பித்துவிட்டு வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழ்பவர்கள்.  ஆனால் அமீரகத்தில் வாழும் இந்தியா்கள் அமீரக குடியுரிமை இல்லாமல் இந்திய பாஸ்போர்ட்டிலேயே வசித்து வருபவர்கள். எனவே, இந்த மக்களின் கருத்து மிக மிக இன்றியமையாதது.

துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்களில் கேரள மாநிலத்தவர்களே அதிகம் பணிபுரிந்து வருகிறார்கள். வெளிநாடுவாழ் கேரள மக்களுக்காக கேரள அரசாங்கம் பல்வேறு  நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ''கேரளாவில் வசிக்காத கேரள மக்களுக்கான விவகாரத்துறை (http://www.norkaroots.net/Norka.htm) செயல்பட்டு வருகிறது. இந்த துறை மூலம் வெளிநாடுகளில் பணியில் இருந்தவர்கள் கேன்சலில் நாடு திரும்பினால் அவர்களுக்கான உதவிகளை அரசுத்துறையான'வெளிநாடுவாழ் கேரள மக்கள் நலச் சங்கம்  (http://pravasiwelfarefund.org/index.php/78-pravasi/71-home)'' செய்து வருகிறது.

ஆனால் வளைகுடாவில் கேரள மக்கள் தொகைக்கு அடுத்த நிலையில் உள்ள தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழக அரசு எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. அந்த மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று துபாயில் உள்ள தமிழர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியின் போது துபாய் இந்திய அமைப்பான ஈமான் கலாச்சார பேரவை மூலமாக அத்தகைய துறையை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், தொடர்ந்து நடந்த ஆட்சி மாற்றத்தினால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அரசாங்கத்தின் திட்டம் யாருக்கானது என்று பார்க்காமல் யாரால் என்று பார்த்து நிறுத்திவிட்டார்கள். திமுக அரசின் ஏற்பாடு என்பதால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

கேரளாவில் முதல்வர்கள் யாராக இருந்தாலும் துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ராசித் அல் மக்தூம் உள்ளிட்ட ஆட்சியாளர்களைப் பார்த்து தங்கள் மாநிலத்திற்கான தேவைகளை பெற்றுச்செல்கின்றனர்.

சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டு, புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு வெளிநாட்டு மக்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, கேரள அமைச்சர் உடனடியாக சவூதி அரேபியா சென்று மன்னரிடம் பேசி கால அவகாசம் நீட்டித்தார். ஆனால், தமிழர்களுக்காக தமிழக அரசின் சார்பில் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் அமைச்சர்கள் மட்டும் வளைகுடாவிற்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சமீபத்தில் கூட தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனிப்பட்ட பயணமாக துபாய் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் வருகையும் அவ்வப்போது நிகழ்கிறது.

தமிழக மக்களை தம் மாநிலத்தின் மக்களாக எண்ணும் அரசாங்கம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தேர்தல் வர இருப்பதால் வளைகுடாவில் உள்ள தமிழர்கள் ஆட்சியாளர்களிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என கேட்டபோது, “படித்தவர்கள் தலைவராக இருக்க வேண்டும். நேர்மையான சிந்தனையும் அரசியல் அனுபவமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணியாத, தாய்நாட்டு மக்களின் நலுனுக்காகப் பாடுபடக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.  உதாரணமாக நாட்டு மக்கள் மீது அன்பும், படிப்பிலும் உயர்ந்த நிலையில் உள்ள சகாயம் ஐஏஎஸ் போன்றவர்கள்  ஆட்சியாளர்களாக வரவேண்டும்” என்று துபாயில் தொழில் செய்துவரும் கோமதி கூறினார்.

துபாய் எழுத்தாளர் திருமதி நசீமா ரசாக் கூறும்போது,  ''தேசத்தின் மக்கள் அனைவரையும் மனிதர்களாக எண்ணி, பாகுபாடற்ற முறையில் செயல்படும்படியான நீதியை நிலைநிறுத்தும் அரசு வரவேண்டும்'' என்றார்.

துபாய் கிஸஸ் பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் ரமா மலர், ''அமீரக வாழ் இந்தியராக அரசியலை பெருமையாக கூறும் வாய்ப்பு அமையவில்லை. அரசியல் தலைமை, தேர்தல் வெற்றி என்பது நாட்டு  மக்கள் நற்பலன்களை  முன்னேற்றத்தையும்  எதிர்நோக்கி அளிக்கும் ஓர் வாய்ப்பு. அதை நிறைவேறற முடியாக எந்தக் கட்சியும் அடுத்த வாய்ப்பை இழக்கவே செய்யும். தேர்தல் வரப்போகும் சமயத்தில் மட்டும் அதற்கு முன்பின் சில மாதங்கள் நல்லாட்சி செய்வதைப்போல் காட்டிக் கொள்வது நல்ல தலைமை அல்ல.

நாட்டின் எல்லா மாநிலங்களையும் சரி சமமாய் ஆட்சி செய்யக்கூடிய கட்சி, மக்களின் தேவை சிலையா அல்லது உலையா என பகுத்தறியும் தலைமை,  வாய்ப்பு தரப்பட்ட ஐந்து ஆண்டுகளில் அதிகபட்ச முன்னேற்றங்களை நிரூபிக்கும் அரசு இவையே நம் நாட்டிற்கு தற்சமயம் தேவை.  இதை நிறைவேற்றாத ஆட்சிக்கு அடுத்த ஆளும் வாய்ப்பு அமையாது போவது உறுதி'' என்கிறார்.

தொழிலதிபர் அன்வர்அலி கூறும்போது, “மக்களை வஞ்சிக்காத அரசு வேண்டும் என்பது மட்டுமல்ல, மக்கள் மீது அக்கறை கொள்ளும்அரசு தேவை.. தூத்துக்குடியில்  13 பேரைக் கொன்ற அரசு, அம்மக்களை தேச குடிமக்களாகவே பார்க்கவில்லை. வேறு நாட்டு மக்கள் தேசத்திற்குள் நுழைந்துவிட்டவர்களைப்போல கருதி சுட்டுக் கொன்று இருக்கிறது. தேச குடிமக்களாக பார்க்காவிட்டாலும் மனிதர்களாகவாவது பார்த்திருக்கலாமே ! துபாய் மன்னர் ஷேக் முஹம்மது போலவோ, கனடாவை ஆளும் ஜஸ்டின் ட்ருடோ போலவோ மக்கள் விரும்பும் ஆளுமை நமக்கு கிடைக்காவிட்டாலும், மக்களை வஞ்சிக்காத அரசு வேண்டும்'' என்று தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.

துபாய் சிட்டி சென்டர் பகுதியில் விற்பனை பிரிவில் இருக்கும் அமீர் ஹம்ஸா, ''அனைத்து மதத்தினரையும் மதித்து லஞ்சத்தை ஒழித்து  தன்னலம் பாராது, பொதுநலம் மட்டுமே  சேவையாக நினைத்து செயல்படுபவரே தமிழ் மண்ணிற்கும் பாரத நாட்டிற்கும் தேவை'' என்றார்.

''நீட் தேர்வு, முல்லைப் பெரியாறு நியூட்ரினோ, போன்ற திட்டங்கள் தமிழகத்தை வஞ்சிப்பதாவே உள்ளன. ராகுல் காந்தி வரமாட்டாரா என்று ஏங்க வைத்துவிட்டார் மோடி. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் வெற்று கோஷங்களாகவே இருக்கின்றன. மேலும் அதிகமான திட்டங்கள்  தோல்வியையே சந்தித்துள்ளன. ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மக்களை வசீகரித்துள்ளன. மத்திய அரசியலில் ஆட்சி மாற்றம்  தேவை. மதச்சார்பற்ற கொள்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தேவை'' என்று துபாய் தனியார் நிறுவத்தில் திட்ட மேலாளராக இருக்கும் தேவா கூறினார்.

சமூக ஆர்வலர் தாஹா கூறும்போது, ''இடைத்தேர்தலில் தமிழகத்தில் யாருடைய ஆட்சி மக்களை ஆளப்போகிறது என்று தெரியாது. யாருடைய ஆட்சியாக இருந்தாலும் வெளிநாட்டு தமிழர்களின் நலனுக்காக தனியான துறையை அமைக்கவேண்டும்'' என்றார்.

தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தங்கள் தேர்தல் அறிக்கையிலாவது இந்தியக் குடியுரிமையுடன் வாழும் வெளிநாட்டுத் தமிழர்களின் நலனுக்காக தனித் துறையை அமைக்க தமிழக கட்சிகள் உறுதி தருமா என்ற கேள்வி எழுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x