Published : 15 Mar 2019 11:55 AM
Last Updated : 15 Mar 2019 11:55 AM
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில், தேர்தலை பின்னர் நடத்தினால் என்ன பிரச்சினை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கடிதம் கொடுத்ததாக கொறடா அளித்த புகாரில் சட்டப்பேரவை தலைவர், அவர்களைத் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று பின்னர் உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு நீக்கம் உறுதியானது.
அவர்கள் நீக்கத்தால் 18 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று திருவாரூர் எம்எல்ஏவும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை ஒட்டி இரு தொகுதிகளும், ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதியிழப்புக் காரணமாக அந்தத் தொகுதியும் சேர்ந்து 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இதனிடையே தேர்தல் அறிவிக்கப்பட்டதில் திடீரென 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் என அறிவிப்பு வெளியானது. அரவக்குறிச்சியில் சுயேச்சை வேட்பாளர் கீதா என்பவர் இரு கட்சிகளும் காசு கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள் என வழக்கு போட்டிருப்பதாகவும், ஒட்டப்பிடாரத்தில் 400 வாக்குகளில் தான் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத கிருஷ்ணசாமி வழக்கு போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதனால் மேற்கண்ட மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில், “வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூன்று தொகுதி இடைத்தேர்தல்களை நடத்தவில்லை” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பதற்கு எவ்வித முகாந்திரமோ, ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.
குறிப்பாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த தகுதி நீக்கம் ஏற்கெனவே உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இறுதிக்கு வந்துவிட்டது இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான வாக்காளர் விரோத நடவடிக்கை’’ என திமுக தரப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மூன்று தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்தே இத்தேர்தலை நடத்திடவேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. அதேபோன்று இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
திமுக சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி முறையீட்டைத் தாக்கல் செய்தார். அவரது முறையீட்டில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 3 தொகுதிகளை நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி ஒத்திவைப்பது சரியல்ல. 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டார்.
வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்றது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி எஸ்.எம்.பாப்டே அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக ஆஜரான தேர்தல் ஆணையத் தரப்பில் மூன்று தொகுதிகளிலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதால் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைக்கும்படி கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் திமுக தரப்பில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் விரைந்து நடத்த எங்களை ஏன் நிர்பந்திக்கிறீர்கள்? 3 தொகுதி இடைத்தேர்தலை பின்னர் நடத்தினால் என்ன பிரச்சினை, எங்களை ஏன் நிர்பந்திக்கிறீர்கள், நாங்கள் விசாரணை நடத்த வேண்டாமா? எதிர்தரப்பு வாதத்தை கேட்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினர்.
வழக்கு விசாரணையில் வாதத்தை வைத்த தேர்தல் ஆணையத் தரப்பு 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 தொகுதி இடைத்தேர்தலை மட்டுமே நடத்த முடியும். 3 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என உறுதியாகத் தெரிவித்து வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைக்கும்படி வாதிடப்பட்டது.
ஆனால் திமுக தொடர்ந்த வழக்கில் 2 வார காலத்திற்குள் உரிய பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் மார்ச் 25-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT