Published : 15 Mar 2019 11:16 AM
Last Updated : 15 Mar 2019 11:16 AM

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 16 பேரும் மீண்டும் களமிறங்குகிறோம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 16 பேர் அந்தந்த தொகுதிகளில் அமமுக சார்பில் மீண்டும் களமிறங்குவது உறுதி என முன்னாள் எம்எல்ஏவும், அமமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான தங்கத்துரை தெரிவித்தார்.

அதிமுகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள், முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அந்தந்த தொகுதிகளில் மீண்டும் களமிறங்க உள்ளனர். ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. எனவே, மீதமுள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட 16 பேர் அந்தந்த தொகுதியில் அமமுக சார்பில் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து நிலக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கத்துரை, ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது உறுதி. நான் நிலக்கோட்டை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். திமுக பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆளுங்கட்சியினர் தான் கடும் போட்டியை தருவர். கடந்த முறை போன்று எளிதாக வெற்றி பெற முடியாது. ஆளுங்கட்சியினரை சமாளிப்பது தான் பெரும்பாடாக இருக்கும்.

டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தால் உண்மையான அதிமுகவினர் எங்களுக்கு வாக்களிப்பர். ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுக்களும் எங்களுக்கு கிடைக்கும். நடுநிலையாளர்களும் எங்களை ஆதரிப்பர் என்பதால் எங்களின் வெற்றி உறுதி என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x