Last Updated : 25 Mar, 2019 07:49 AM

 

Published : 25 Mar 2019 07:49 AM
Last Updated : 25 Mar 2019 07:49 AM

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணிகள் என்னென்ன?

இந்தியாவில் 17-வது முறையாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுப் பிரச்சாரங்களும் சூடுபிடித்துள்ளன. இந்தச் சூழலில் நம்மிடம் வாக்குகள் கேட்டு வரும் வேட்பாளர் வெற்றிபெற்று டெல்லி செல்லும்போது அவர் நமக்காக என்னென்ன பணிகளைச் செய்வார், அவரால் என்னென்ன செய்ய முடியும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

ஒரு எம்.பி.யின் பொறுப்புகள், பணிகள் குறித்து அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பாகச் சொல்லப்படவில்லை. எனினும், 105-வது கூறில் 3-வது உட்கூறில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும் பணிகளும் பேசப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றக் கமிட்டிகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பொறுப்புகளையும் பணிகளையும் நாடாளுமன்றமே அந்தந்தக் காலச்சூழல்களில் முடிவெடுக்கலாம் என்கிறது அரசமைப்புச் சட்டம். இது தவிர, பல்வேறு சட்டங்களின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு எம்.பி.க்குப் பல்வேறு பணிகள் உள்ளன.

சட்டம் இயற்றும் பணி

அவையில் முன்வைக்கப்படும் மசோதா தொடர்பான விவாதங்களில் ஒரு எம்.பி., பங்கேற்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறார். அமைச்சர் அல்லாத ஒரு எம்.பி., தனிநபர் மசோதாக்களின் மூலம் சட்டரீதியான மாற்றங்களையும் பரிந்துரைக்கலாம்.

அரசமைப்புச் சட்டத்தில் அவ்வப்போது சட்டத் திருத்தம் செய்யப்படும்போது ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. மாநிலங்களின் எல்லைகளை மறுவரையறை செய்வது, சட்ட மேலவையை ஏற்படுத்துவது தொடங்கி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் முதலிய அரசமைப்புச் சட்டத்தின் கீழான நிறுவனங்கள் தொடர்பாகச் சட்டமியற்றும்போதும் எம்.பி.க்கள், விவாதங்களில் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை முன்வைக்க முடியும்.

தேர்ந்தெடுக்கும் பொறுப்பு

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் வாக்களிக்கிறார். மக்களவை உறுப்பினர் சபாநாயகரையும் துணைச் சபாநாயகரையும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார். மாநிலங்களவை உறுப்பினரோ மாநிலங்களவையின் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்.

நிதி தொடர்பான பொறுப்புகள்

மக்களுக்கு வரிவிதிப்பது தொடர்பான எந்த முடிவுகளும் மக்களவை உறுப்பினர்களின் அங்கீகாரமின்றி நிறைவேற்றப்படாது. நாட்டின் நிதிநிலை அறிக்கையும் மக்களவையின் அனுமதியைப் பெற வேண்டும். நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு நிதி கமிட்டிகளில் பங்குபெறுவதன் வாயிலாக, செலவிடப்படும் நிதி தொடர்பான முடிவுகளையும் கட்டுப்பாடுகளையும் செய்யும் வாய்ப்பும் மக்களவை உறுப்பினருக்கு உண்டு.

மேற்பார்வை செய்யும் பொறுப்பு

ஜனாதிபதி மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது தொடர்பான விவாதத்திலும் எம்.பி.யின் பங்கேற்பு எதிர்பார்க்கப்படுகிறது. உதவி ஜனாதிபதி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீக்கத்தின்போதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் பங்குபெறுவார்கள்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசின் செயல்பாடுகளை விவாதிப்பதன் வாயிலாக அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் வைத்துள்ளார். கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், நம்பிக்கையில்லாத் தீர்மானம், வெட்டுத் தீர்மானம் போன்றவை மூலம் இரண்டு அவைகளிலும் விவாதங்கள் வழியாக அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.

பொதுக் கணக்குக் குழுக்கள், பொது மதிப்பீட்டுக் குழுக்கள், பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவை தொடர்பான கமிட்டிகளிலும் இடைக்காலக் கமிட்டிகளிலும் உறுப்பினராகப் பங்கேற்று அரசின் பணிகளை மேற்பார்வை செய்யலாம்.

தொகுதியின் குரல்

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதியின் குரலாகச் செயல்படுகிறார். தனது தொகுதியின் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்குகிறார். மாவட்ட ஆட்சியர் அளவில் செயல்படும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பான பங்கேற்பைச் செய்ய முடியும். மத்திய, மாநில அரசு மட்டத்தில் செய்யப்படும் பணிகளிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஊக்கத்துடன் ஈடுபடலாம்.

ஒரு தொகுதிக்கு ஐந்து கோடி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் அடிப்படையில் 1993 முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்காக ஆண்டுதோறும் தொகுதி நிதி ஒதுக்கப்பட்டுவருகிறது. ரூ.5 லட்சத்தில் தொடங்கி தற்போது ரூ.5 கோடியாக இருக்கும் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட நிர்வாகத்துக்கு விநியோகம் செய்யப்படும். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வாழும் பகுதிக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனக்கு ஒதுக்கும் நிதியிலிருந்து முறையே 15% மற்றும் 7.5% ஒதுக்க வேண்டும். அவை கட்டிடங்கள் போன்ற நீடித்த தன்மையுள்ள உடைமைகளாக இருக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி நிதியை மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துக்கான நிதியோடும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு

16-வது நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் தொகுதி நிதியை சராசரியாக 80%-க்கு மேல் தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்குச் செலவிட்டிருக்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களில் பங்கேற்பு, வருகை ஆகியவற்றில் தமிழக எம்.பி-க்களின் செயல்பாடு தேசிய அளவில் சராசரிக்கும் கீழே இருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் பங்கேற்பு, தேசிய சராசரியாக 80% உள்ளது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களோ சராசரியாக 78% நாட்களே வருகை தந்துள்ளனர். விவாதங்களில் தேசியப் பங்கேற்பு சராசரி 63.6% ஆக உள்ளது. தமிழக உறுப்பினர்கள் 43.6% அளவிலேயே விவாதப் பங்கேற்பைச் செலுத்தியுள்ளனர் என்பது வருத்தமான விஷயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x