Last Updated : 16 Mar, 2019 11:00 AM

 

Published : 16 Mar 2019 11:00 AM
Last Updated : 16 Mar 2019 11:00 AM

புதுகை தொகுதியை மீட்க களம் இறங்கும் ‘நோட்டா’ குழு

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்பதற்காக 3-வது முறையாக மீண்டும் இந்த மக்களவைத் தேர்தலிலும் ‘நோட்டா’ குழு களம் இறங்குவதால் திருச்சி, சிவகங்கை, கரூர் மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனி சமஸ்தானமாக விளங்கிய புதுக்கோட்டை, கடந்த 1951-ல் இருந்து 2004 வரை நடைபெற்ற தேர்தல் வரை மக்களவைத் தொகுதியாகவும் இருந்தது. இதில், 1951-ல் நடைபெற்ற தேர்தலில் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே.எம்.வல்லத்தரசு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பிறகு 1957-ல் ஆர்.ராம நாதன்(காங்கிரஸ்), 1962, 1967-ல் ஆர்.உமாநாத்(கம்யூனிஸ்ட் கட்சி), 1971-ல் கே.வீரய்யா(திமுக), 1977-ல் வி.எஸ்.இளஞ்செழியன் (அதிமுக), 1980-ல் வி.என்.சாமிநாதன்(காங்கிரஸ்), 1984,1989, 1991-ல் என்.சுந்தரராசு (காங்கிரஸ்), 1996-ல் திருச்சி என்.சிவா(திமுக), 1998-ல் ராஜா.பரமசிவம் (அதிமுக), 1999-ல் எஸ்.திருநாவுக்கரசர் (எம்.ஜி.ஆர் அதிமுக), 2004-ல் எஸ்.ரகுபதி(திமுக) வெற்றி பெற்றனர்.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2009-ல் நடைபெற்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட் டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளாக இருந்தது. புதுக் கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, விராலிமலை, திருமயம் ஆகிய 6 தொகுதிகளாக உருவாக்கப்பட்டன.

ஆனால், புதுக்கோட்டை மக்க ளவைத் தொகுதி நீக்கப்பட்டது. திருச்சி, கரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் இணைக்கப்பட்டன. புதுக்கோட்டை என்ற மக்களவைத் தொகுதியே இல்லாமல் போனது மாவட்ட மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

தொகுதி மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தின் வாயிலாக 2009-ல் நடைபெற்ற தேர்தலில் தொகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13,680 பேர் 49ஓ-வுக்கு(நோட்டாவுக்கு) வாக்கை பதிவு செய்திருந்தனர்.

அதன்பிறகு, 2014-ல் நடைபெற்ற தேர்தலில் 50,932 வாக்குகள் பதிவாகின.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் தொகுதி மீட்புக் குழு நோட்டாவுக்கு வாக்களிக்க கோரும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுவது இம்மாவட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மகாத்மா காந்தி சமூக நலப் பேரவைத் தலைவர் ந.தினகரன் கூறியபோது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 12.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதுக்கோட்டைக்கென மக்களவை உறுப்பினர் இல்லா ததால் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம், புதிய ரயில் பாதை அமைத்தல், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வு போன்ற மாவட்டம் சார்ந்த பிரச்சினைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று நிறைவேற்ற முடியவில்லை.

எனவே, மீண்டும் தொகுதி மறுவரையறை செய்து புதுக் கோட்டை மக்களவைத் தொகுதியை உருவாக்க வேண்டும் எனக் கோரி வரும் மக்களவைத் தேர்தலிலும் நோட்டாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளோம். இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இத்தேர்தலில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும் என நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x