Published : 16 Mar 2019 01:37 PM
Last Updated : 16 Mar 2019 01:37 PM

மார்க்சிஸ்ட் வேட்பாளராக சு.வெங்கடேசன் அறிவிப்பு: மதுரை தொகுதியில் ‘சீட்’ கிடைத்த பின்னணி

மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு. வெங்கடேசன், அதிமுகவைச் சமாளித்து வெற்றிக் கனியை பறிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திமுக கூட்டணியில் எதிர்பார்த்தபடி மதுரை மக்களவைத்தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக எழுத்தாளர் சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். மதுரை தொகுதியில் ஆரம்பத்தில் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி போட்டியிடுவதாக கூறப்பட்டது. அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

மதுரையில் போட்டியிட்ட அனுபவம் இருந்ததாலும், தேசிய அளவில் அறிமுக மானவர் என்பதாலும் உ.வாசுகியே மதுரை தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், சு.வெங்கடேசனும் மதுரை தொகுதிக்கு ‘சீட்’ கேட்டார். 2011 சட்டமன்றத் தேர்தலில் மார்க் சிஸ்ட் சார்பில் திருப்பரங்குன்றம் தொகு தியில் சு.வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 28 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியரான இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற் றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலா ளராக இருந்தார். தற்போது மாநிலத் தலை வராக பணியாற்றி வருகிறார்.

மார்க்சிஸ்ட் தலைமை உ.வாசுகி, சு.வெங்கடேசன் ஆகிய இருவர் பெய ரையும் பரிசீலித்ததில், உள்ளூர்க்காரர் என்ற அடிப்படையில் சு.வெங்கடேசனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறுகையில், தமிழகம் முழுவதும் கலை இரவு நிகழ்ச் சிகளை நடத்தியவர் சு.வெங்கடேசன். கட்சியின் நாளிதழான மதுரை தீக்கதிரில் பணிபுரிந்திருக்கிறார். கீழடி அகழாய்வுப் பிரச்சினையை உலகறியச் செய்ததில் முதன்மைப் பங்கு இவருக்கு உண்டு.

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூக, தமிழர் பண்பாட்டு, பாதுகாப்பு இயக்கப் போராட்டங்களை முன்னெடுத்தவர். மதுரையில் முன்பு கட்சி வலுவாக இருந்தபோது இருமுறை மோகன் எம்பியாக இருந்தார். இடையில் திமுக வின் மு.க.அழகிரி, அதிமுகவின் கோபால கிருஷ்ணன் ஆகியோர் வெற்றிபெற்றதால் இந்தத் தொகுதி மார்க்சிஸ்ட் கையில் இருந்து திராவிடக் கட்சிகளின் கைக்கு மாறியது. அதனால், எங்கள் கட்சியினர் சோர்வடைந்தனர்.

மதுரை தொகுதி தங்களுக்கு வேண்டும் என கட்சித் தலைமை கேட்டு வாங்கியது. திமுகவில் உட்கட்சிப் பிரச்சினைகளால் அக்கட்சியினர் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. மதுரையில் வெற்றி பெற்றால் தொடர்ந்து இந்தத் தொகுதியைத் தக்கவைக்க நினைத்துள்ள கட்சித் தலைமை ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என முடிவு செய்தபோது சு.வெங்கடேசனை தேர்வு செய்தது.

உள்ளூர்க்காரர் என்பதோடு நடு நிலையாளர்களிடமும், அனைத்துக் கட்சி யினரிடமும் அறிமுகமானவர் என்பதால் அவரை வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளது, என்றனர். பாஜக, அதிமுக மீதான மக்களின் அதிருப்தி மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக மாற வாய்ப்புள்ளது. அதிமுகவின் ஆட்சி அதிகாரம், பண பலம் மற்றும் மெகா கூட்டணி பலத்தை தாண்டி சு.வெங்கடேசன் வெற்றிபெற பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியதிருக்கும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி.தினகரனின் அமமுக வேட்பாளர் பெறும் வாக்குகள், அதிமுகவுக்கு இருக்கும் எதிர்ப்புகள் உள்ளிட்டவற்றைப் பொருத்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனின் வெற்றி அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x