Published : 25 Feb 2019 03:18 PM
Last Updated : 25 Feb 2019 03:18 PM

இது தேர்தல் ஒப்பந்தம்; அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் நெருடல் இல்லை: செய்தியாளர்களின் தொடர் கேள்விகளுக்கு அன்புமணி பதில்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:

அதிமுகவிடம் பாமக வலியுறுத்திய பல கோரிக்கைகள் மத்திய அரசு செய்ய வேண்டியது. இதுவரை 3,500 மதுக்கடைகள் மூடியிருக்க வேண்டும். பூரண மதுவிலக்கு சாத்தியமா? ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. உரிமையை பறித்தவர்களிடமே கூட்டணி அமைத்ததாக விமர்சனம் எழுந்துள்ளதே?

பல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முன்பு வெளியிலிருந்து போராடினோம். இப்போது உள்ளிருந்து வலியுறுத்தி பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவை எதிர்த்து போட்டியிட்டது. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். ஒரு எம்பி தொகுதி வெற்றி பெற்றோம். அப்போது வேறு சூழல் இருந்தது. இப்போது 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று உள்ளிருந்து கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.

அதிமுகவை விமர்சனம் செய்துவிட்டு கூட்டணி அமைத்திருக்கிறீர்கள். இது சட்டப்பேரவை தேர்தலிலும் தொடருமா?

சட்டப்பேரவை தேர்தல் குறித்து இப்போது சொல்ல முடியாது, அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

அதிமுகவை விமர்சனம் செய்தோம். விமர்சனம் செய்வதை பார்த்தால், இந்தியாவில் எந்த கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது. உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது. ஆம் - ஆத்மி - காங்கிரஸ், திரிணாமுல் - காங்கிரஸ், சிவசேனா  - பாஜக கூட்டணி, திமுக - காங்கிரஸ் கூட்டணி  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்களை நீக்க வேண்டும் ஏன் வலியுறுத்தவில்லை? இடைத்தேர்தலில் ஆதரவு என சமரசம் ஏன்?

யார் தவறு செய்தாலும் விசாரணை நடத்தி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் மாறவில்லை.

இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என பாமக ஏற்கெனவே சொன்னது.

மற்ற கட்சிகளிடம் இருந்து பாமக மாறுபட்டது என சொன்னீர்கள். கூட்டணியால் பாமக சராசரி கட்சி என ஒத்துக்கொள்கிறீர்களா? எப்படி பிரச்சாரம் செய்வீர்கள்?

இந்த கூட்டணியால் பாமகவின் கொள்கைகளில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம். இது தேர்தல் தொகுதி உடன்படிக்கை. உள்ளே இருந்து கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பது சுலபம்.

அதிமுகவை விமர்சித்துவிட்டு இப்போது கூட்டணி குறித்து விளக்கம் கொடுப்பது நெருடலாக இல்லையா?

பொதுமக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளும் அமைச்சர் உள்ள கட்சியிடம் கூட்டணி வைப்பது எந்த வகையில் நியாயம்?

ஆளுநரிடம் அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மாநில அரசு மீதானவை. அவற்றை விசாரிக்க வேண்டும். குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை செய்யட்டும். நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கட்டும்.

ஸ்டாலின் எங்கள் மீது கடும் விமர்சனம் வைக்கிறார். அது அவர்களுடன் கூட்டணி அமைக்கவில்லை என்ற ஆதங்கத்தாலும், தோல்வி பயத்தாலும் இருக்கலாம். ஆனால், நாங்கள் திமுகவை விமர்சனம் செய்ய மாட்டோம். திராவிட நாடு இல்லாவிடில் சுடுகாடு என்றனர். இப்போது எத்தனை பேர் சுடுகாடு சென்றனர்? இல்லை திராவிட நாடு அடைந்துவிட்டோமா?

பாமக சுயநல கட்சி என்கிறார்களே? அதிமுக அவர்களது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இடைத்தேர்தல் சமரசத்தில் உங்களை பயன்படுத்திக்கொள்கிறதா?

இது தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி. இன்னும் பாஜகவுடன் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. பாஜகவுடன் கூடிய விரைவில் பேசும் போது மத்திய அரசிடம் எழுவர் விடுதலை, நீட் உள்ளிட்டவற்றை வலியுறுத்துவோம்.

இடைத்தேர்தல் குறித்து சொன்னீர்கள். இது தேர்தல் ஒப்பந்தம், அப்படித்தான் நடக்கும்.

உங்கள் கட்சியிலிருந்த ராஜேஸ்வரி பிரியா பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளாரே?

அது அவருடைய கருத்து

நாடாளுமன்றத்தில் குறைவான வருகைப்பதிவைக் கொண்ட எம்பி நீங்கள் தான். தருமபுரி மக்களுக்கு நீங்கள் சொல்லக்கூடியது என்ன?

மொரப்பூர் - தருமபுரி ரயில் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். தமிழகத்தில் வேறு எங்கும் ரயில் திட்டங்கள் வரவில்லை. ஏரி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

கட்சி வாய்ப்புக் கொடுத்தால் மீண்டும் போட்டியிடுவேன்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x