Published : 26 Feb 2019 08:50 AM
Last Updated : 26 Feb 2019 08:50 AM

முடிவு தேமுதிக கையில்.. ஓரிரு நாளில் தெரியும்!

மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை, தேசிய, மாநில கட்சிகளுக்கு கூட்டணி மிகவும் முக்கியம். மக்களின் எண்ண ஓட்டம் மற்றும் அரசியல் சூழலை புரிந்துகொண்டு, சரியாக யோசித்து வலுவான கூட்டணியை அமைத்துவிட்டால் பாதி கிணறு தாண்டியது போல. இதனால்தான், பாமக, பாஜகவுடன் அதிமுகவும், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுகவும் கூட்டணி அமைத்துள்ளன.

இதில், தேமுதிகவின் நிலை தற்போது திரிசங்கு சொர்க்கமாக உள்ளது. அதிமுக, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், தனித்து நிற்கலாமா என்ற எண்ணமும் அதற்கு உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதால், தங்களுக்கும் அதேபோல ஒதுக்க வேண்டும் என தேமுதிக கேட்டு வருகிறது. திமுகவிடமும் அதே கருத்தை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கிவிட்ட நிலையில், இரு கட்சிகளும் தேமுதிகவுக்கு போதிய தொகுதிகள் ஒதுக்க முடியாத நிலையில் உள்ளன. இதனால், தொடர்ந்து இழுபறியான நிலையே நீடிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘‘தேமுதிகவுக்கு தமிழகத்தில் என்ன பலம் என்பது எங்களுக்கு தெரியும். கூட்டணி குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேசி வருகிறோம். இறுதி முடிவை விஜயகாந்த் அறிவிப்பார். தனித்து நிற்பதும் எங்களுக்கு புதிதல்ல. அதில் நாங்கள் சளைத்தவர்களும் அல்ல’’ என்றார்.

விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும் தேமுதிக பொதுக்கூட்டங்களில் மற்ற அரசியல் கட்சிகளை விமர்சித்து வருவதுடன், தேமுதிக பலம் குறித்தும் பேசி வருகிறார். இதனால், கூட்டணி சேரும் முயற்சியை நிறுத்திவிட்டு, தேமுதிக தனித்து நிற்கப்போகிறதோ என்ற ஊகமும் எழுந்துள்ளது.

இருப்பினும், அதிமுக சார்பில் மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து தேமுதிகவுடன் பேசி வருகின்றனர். இதை சேலத்தில் முதல்வர் பழனிசாமியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரம், தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் தேமுதிக விடாப்பிடியாக இருந்தால்,  கூட்டணிப் பேச்சுவார்த்தையை நிறுத்திவிடும் முடிவுக்கும் அதிமுக வந்துள்ளதாக தெரிகிறது.

சென்னை திருவான்மியூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டார். தேமுதிக தனித்துப் போட்டியிடுமா என்பது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், ‘‘கூட்டணி சேர்வதா, தனித்துப் போட்டியிடுவதா என்பது அவர்கள் கட்சியின் விருப்பம்.

எங்களை பொறுத்தவரை கூட்டணியின் கதவுகள் திறந்தே உள்ளன. யார்வேண்டுமானாலும் பேசலாம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வந்தாலும், வரலாம். வந்தால் சந்தோஷம். இல்லாவிட்டாலும் கவலை இல்லை’’ என்றார்.

தேமுதிக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை மார்ச் 1-க்குள் இறுதிசெய்யஅதிமுக தரப்பில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று பாஜக தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தேமுதிக என்ன செய்யப் போகிறது என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x