

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி ஆட்சியின்போது ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மாத ஊதியம் அதிகரிக்கப்பட்டது. இதுதொடர்பான அரசு உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து தற்காலிக ஆசிரியர்கள் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று கூறியதாவது:
உத்தரபிரதேசத்தில் தற்காலிக ஆசிரியர்கள் (ஷி க் ஷா மித்ராஸ்) ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். கவுரவமான சம்பளம் கேட்டும் பணி நிரந்தரம் கேட்டும் அவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களுடைய கடின உழைப்பைப் பற்றி உ.பி. அரசு தலைவர்கள் கவலைப்படவில்லை. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வீதிகளில் வந்து போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. அவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஆசிரியர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல், ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் ‘டி ஷர்ட்’ விற்பதில் மும்முரமாக உள்ளனர். எனவே,பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பிரச்சினையை தீர்க்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்றார்.