Last Updated : 13 Mar, 2019 11:02 AM

Published : 13 Mar 2019 11:02 AM
Last Updated : 13 Mar 2019 11:02 AM

மக்களவை தேர்தலில் முன்னாள் ராணுவத்தினரை போட்டியிட வைக்க காங்கிரஸ், பாஜக திட்டம்

முன்னாள் ராணுவத்தினரை மக்களவை தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ், பாஜக திட்டமிட்டு வருகின்றன. இது, பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தி அந்நாட்டில் இருந்து வெற்றியுடன் திரும்பிய அபிநந்தனின் தாக்கமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 14-ல் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தாக்குதல் நடத்தியது. இதில், சிஆர்பிஎப்பின் 40 வீரர்கள் இறந்ததைத் தொடர்ந்து இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தியாவுக்குள் நுழையும் முயற்சியில் இறங்கிய பாகிஸ்தான் விமானத்தை தடுத்து நமது போர் விமானியான அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். பிறகு பாகிஸ்தானின் போர்க் கைதியாக சிக்கியவர் வெற்றி வீரனாகத் திரும்பினார். நாட்டின் பெருமையை சர்வதேச அளவில் நிலைநாட்டிய இந்த சம்பவத்திற்கு பின் இந்திய ராணுவத்தினர் மீதான மதிப்பு நாடு முழுவதிலும் கூடியுள்ளது. இதன் தாக்கம் மக்களவை தேர்தலிலும் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் ராணுவ வீரர்களை வேட்பாளர்களாக நிறுத்தகாங்கிரஸ் மற்றும் பாஜக திட்டமிடுவதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒருவரையாவது போட்டியிட வைக்க ராகுல் காந்தி விரும்புகிறார். இதற்காக, முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கங்களிடம் மாநிலத்திற்கு தலா இரண்டு பெயர்களை பரிந்துரைக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. இதன் மீதான இறுதி முடிவு குஜராத்தின் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்திற்கு பின் எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தனர்.

காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று இந்திய முன்னாள் ராணுவவீரர்கள் சங்கங்களின் முக்கியநிர்வாகிகள் சார்பில் வேட்பாளர்கள் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இவர்கள் சார்பில்தேர்வு செய்யப்பட்டு தயாரிக்கப்படும் முன்னாள் ராணுவ வீரர்களின் பட்டியல் ஓரிரு நாட்களில் காங்கிரஸிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதில், தமிழகம் சார்பில் அபிநந்தனின் தந்தையான ஓய்வுபெற்ற ஏர்வைஸ் மார்ஷல் வர்தமான் மற்றும் வேலூரை சேர்ந்தலெப்டினண்ட் கர்னல் (ஓய்வு) டி.சி.சுந்தர், பிரிகேடியர் மோகன்சுந்தரம் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், இந்த இருவரிடமும் மக்களவை தேர்தலில் போட்டியிட சம்மதம்பெறப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து அபிநந்தனின் தந்தையான வர்தமானிடம் ‘இந்து தமிழ்’ தொலைபேசியில் தொடர்புகொண்ட போது, ‘‘அது குறித்து எந்த கருத்தும் கூறவிரும்பவில்லை’’ எனத் தெரிவித்தார். வர்தமானுடன் சேர்த்து இந்த மூவருமே சென்னையில் வாழும் தமிழர்கள்.

இதனிடையே, பாஜக சார்பிலும் முன்னாள் ராணுவ வீரர்களை மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக்கும் முயற்சிசெய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அக்கட்சி சார்பில் தமிழகத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் வர்தமானை போட்டியிட வைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இவரது மகனான அபிநந்தன் போன்ற சாதனையாளர்கள் பட்டியலும் பாஜக சார்பில் தொகுக்கப்பட்டு வருகிறது.

இதுபோல், முன்னாள் ராணுவவீரர்களை பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட வைப்பது புதிதல்ல. 2014 தேர்தலில் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒலிம்பிக் விருது பெற்ற ராஜ்யவர்தன் ராத்தோரும், ராணுவ தளபதியாக இருந்த வி.கே.சிங்கும் பாஜகசார்பில் ராஜஸ்தான் மற்றும் உபி.யில் போட்டியிட்டு வென்றிருந்தனர். இதில், ராத்தோர் காலாட்படையின் கர்னலாகவும், ராணுவத்தின் தளபதியாக வி.கே.சிங்கும்பதவி வகித்தவர்கள். இவர்கள் தேர்வின் பின்னணியில், ஒலிம்பிக்விருதால் பெற்ற ராத்தோரின் புகழும், காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடனான வி.கே.சிங்கின் மோதல் சர்ச்சையும் காரணமாக இருந்தது. இந்த இருவருமே பாஜக தலைமையிலான அரசின் அமைச்சரவையில் உறுப்பினர்கள். இவர்களுக்கும் முன்னதாக பாஜகவின்மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங்கும் ஒரு முன்னாள் ராணுவஅதிகாரி என்பது நினைவுகூரத்தக்கது.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x