

முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, விஷவாயு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை), கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து உரையாற்றினார். அதன் விவரம்:
"அதிமுக தேர்தல் களத்தில் பிரச்சாரத்திற்கு வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்லக்கூடிய கூட்டங்கள் அனைத்தும் பெரிய பெரிய கூட்டங்கள், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போல்.
வேனில் கிளம்பி விட்டார். ஏதோ தன்னை எம்ஜிஆர் போன்றே நினைத்துக் கொண்டு செல்கின்றார்.
இதைவிட பெரிய ஜோக் என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி எங்கு சென்றாலும் நான் ஒரு விவசாயி என்கின்றார். ஒரு விவசாயி நாட்டை ஆள்வது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்கின்றார். விவசாயி நாட்டை ஆளலாம், அப்படி ஒரு விவசாயி நாட்டை ஆளும்பொழுது ஸ்டாலின் மனப்பூர்வமாக வரவேற்பான் - அதை ஆதரிப்பான். ஆனால், விஷவாயு இந்த நாட்டை ஆளக்கூடாது. எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, விவசாயி என்று சொல்வதற்குக் கூட அருகதை கிடையாது. அவர் விவசாயி அல்ல விஷவாயு.
'கஜா' புயல் டெல்டா பகுதியில் அழித்து வாழ்வாதாரத்தை இழந்து இருந்த மக்களைச் சென்று இந்த விவசாயி சந்தித்தாரா?, இல்லை. அதன்பின்னர் நாடகம் நடத்த வானிலே பறந்தார்.
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் ரவுடிகள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கேக் வெட்டும் காட்சி வருகின்றது, எங்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றது?
வாரிசுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று சில செய்திகள் வருகின்றன. வாரிசுகள் என்ற அடிப்படையில் அல்ல தகுதிகள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
என்னைச் சொல்லவில்லையா? சொன்னவர்கள் எல்லோரும் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கின்றார்கள். ஏன் வாரிசுக்கு சீட் கொடுக்கக்கூடாதா? திமுகவில் வாழையடி வாழையாக வாரிசுகள் இருக்கின்றார்கள். அப்படி இருந்தாலும் தகுதியின் அடிப்படையில் வெற்றி பெறுபவர், வெற்றி பெற்று வருவார் என்ற உறுதியோடு தான் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது தவிர வேறல்ல"
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.