Published : 08 Apr 2019 08:33 PM
Last Updated : 08 Apr 2019 08:33 PM

கள நிலவரம்: மத்திய சென்னை தொகுதி யாருக்கு?

மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் (பாமக) சாம் பால், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

 எனினும், அமமுக சார்பில் கூட்டணி வேட்பாளர் (எஸ்டிபிஐ) தெகலான் பாகவி, முஸ்லிம் சமூகத்தினரிடையே அதிமுகவின் வாக்குகளை கணிசமாக பிரிப்பார் என்ற நிலை உள்ளது.

தயாநிதி மாறன் அத்தொகுதியில் ஏற்கெனவே வெற்றி பெற்றவர் என்பதால், தொகுதி மக்களிடையே நன்கு பரிச்சயமானவர். நடுத்தர வர்க்க மக்களைக் குறிவைத்து அவரது பிரச்சாரம் இருக்கிறது. ஐடி உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற அத்தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை வாக்குறுதிகளாக அளித்திருக்கிறார்.

மேலும், பாஜக ஆட்சியின் குறைபாடுகளை குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்தும் எதிர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

பிரச்சினை ரீதியாக தொகுதி மக்களை அணுகும் இந்த முறை, அவருக்கு வெற்றி பெறும் வாய்ப்பை அதிகமாக்கும் என நம்பப்படுகிறது. அதேநேரத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியும் அத்தொகுதியில் வீதி வீதியாகச் சென்று தயாநிதி மாறனுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.கருணாநிதியின் மகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால், இது தயாநிதி மாறனுக்குக் கூடுதல் வாக்குகளை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. 

எதிர்முனையில், பாமகவின் சாம் பால், தொழிலதிபர் என்ற முகம் கொண்டிருக்கிறார். தவிர, மத்திய சென்னையில் பாமகவுக்கு என செல்வாக்கு இல்லை. மேலும், அவர் தொகுதி மக்களிடையே தயாநிதி மாறன் அளவுக்கு பரிச்சயம் இல்லாதவர்.

எனினும், அவருக்கு ஆதரவாக, அதிமுகவினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்வதால், கணிசமான வாக்குகளைப் பெறுவார் என கூறப்படுகிறது. மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெறுவார் என்றே கள நிலவரம் இருந்தாலும், அந்த வெற்றி பெரும் வாக்கு வித்தியாசத்தில் அல்லாமல், குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

மத்திய சென்னை தொகுதியில் 2 முறை எம்.பி.யாக வென்ற தயாநிதி மாறன் திமுக வேட்பாளராக மீண்டும் களம் இறங்கியுள்ளார். தயாநிதிக்கு வெற்றி வாய்ப்பு என்று சொல்லப்பட்டாலும் அமமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவியும் நெருக்கமான வாக்குகளைப் பெறுவார் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாமக வேட்பாளர் சாம் பால் 3-வது இடத்தில் உள்ளார். கள நிலவரத்தைப் பொறுத்தவரையில் பாமக வேட்பாளர் சாம் பால் பிரச்சார வேகத்தில் முனைப்பு காட்டி வருவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

https://www.kamadenu.in/opinion-poll-result?utm_source=site&utm_medium=TTH_election2019_banner&utm_campaign=TTH_election2019_banner

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x