Published : 09 Apr 2019 09:48 AM
Last Updated : 09 Apr 2019 09:48 AM

கள நிலவரம்: பெரம்பலூர் தொகுதி யாருக்கு?

நீண்டகாலமாக ரிசர்வ் தொகுதியாக இருந்த பெரம்பலூர் தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு பொதுத்தொகுதியாக மாறியுள்ளது. பெருமளவு கிராமப்புறங்களை கொண்ட இந்த தொகுதியில் விவசாயம் மட்டுமே தொழில்.

பெரம்பலூரை தவிர திருச்சி மாவட்டத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளும், கரூர் மாவட்டத்தின் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியும் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

இங்கு என்.ஆர். சிவபதி (அதிமுக), டி.ஆர். பச்சமுத்து (ஐஜேக ), எம். ராஜசேகரன் (அமமுக), அருள் பிரகாசம் (மநீம), சாந்தி (நாம் தமிழர்) ஆகியோர் போட்டுயிடுகின்றனர்.  2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மருதராஜா 4,62,693 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதனால் இம்முறை அதிமுக சிவபதியைக் களம் இறக்கியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் டி.ஆர்.பச்சமுத்து வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இத்தொகுதியில் சுமார் 27% முத்தரையர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்து ஆதிதிராவிடர் இனத்தவர்களும், ரெட்டியார், உடையார் சமூகத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இத்தொகுதியில் அதிக முறை விஐபி வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். சிறந்த நாடாளுமன்றவாதியாகப் புகழ்பெற்ற இரா.செழியன், தொழிற்சங்கத்  தலைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்த பழனியாண்டி, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, நடிகர் நெப்போலியன் ஆகிய பிரபலங்கள் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளனர்.

திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றியை ருசித்துள்ளன. இம்முறை திமுக சார்பில் டி.ஆர்.பச்சமுத்துவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் டி.ஆர்.பச்சமுத்துவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. இரண்டாம் இடத்தில் அதிமுக வேட்பாளர் சிவபதியும் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் சாந்தியும் உள்ளனர். அமமுக வேட்பாளர் எம்.ராஜசேகரன் 4-ம் இடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x