Published : 06 Apr 2019 12:18 PM
Last Updated : 06 Apr 2019 12:18 PM

நாம் தமிழர் ஆட்சியில் கருப்பட்டி காய்ச்சுதல், கள் இறக்குதல் அரசு வேலையாக்கப்படும்: சீமான் பேச்சு

நாம் தமிழர் ஆட்சியில் பட்டுப்பூச்சி வளர்த்தல், நெசவுத்தொழில் உள்ளிட்டவை அரசு வேலையாக்கப்படும் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில், அவர் பேசியதாவது:

"தமிழ்மொழி இறந்து போய் விட்டது. திமுக அதனை தடுக்க எதுவும் செய்யவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வருவோம் என்கிறது திமுக. இத்தனை ஆண்டுகள் என்ன செய்தது?

தமிழை எழுதி வைத்துக்கொள்ளாமல் படிக்கத் தெரியாதவர்கள் ஸ்டாலின், ஓபிஎஸ்-இபிஎஸ்.

அதிமுகவும் திமுகவும் ஒரு இடத்தைக் கூட முஸ்லிம்களுக்கு அளிக்கவில்லை. ஆனால், முஸ்லிம்கள் 5 பேரை நாம் தமிழர் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. நீர் மேலாண்மை என்றால் என்னவென்று கூட ஸ்டாலின், இபிஎஸ்-ஓபிஎஸ்க்கு தெரியாது.

காங்கிரஸ்-பாஜக தமிழ்நாட்டில் எதற்கு? திமுகவும், அதிமுகவும் வென்று என்ன செய்யப் போகிறது? இந்த கட்சிகளுக்கு கச்சத்தீவு மீட்பு, எழுவர் விடுதலையில் என்ன நிலைப்பாடு?

திராவிட கட்சிகளில் அனைவருக்கும் வயதாகி விட்டது. அதனால் தான் மகன்களை இறக்கி விடுகின்றனர். அதிகமாக 5 ஆண்டுகளில் நாம் ஜெயிக்கப்போவது உறுதி. அதன்பிறகு என்ன ஆகிறது என பாருங்கள்.

இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் எல்லாம் அழுகிய குப்பைகள். அதனை தூய்மையாக்குவது தான் தூய்மை இந்தியா. தரமற்றவர்களின் ஆட்சியால் தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம் ஆகியவை தரமற்றுப் போய் விட்டது.

நாம் தமிழர் ஆட்சியில் பட்டுப்பூச்சி வளர்த்தல், நெசவுத்தொழில், மீன் வளர்த்தல், பாய் பிண்ணுதல், கருப்பட்டி காய்ச்சுதல், கள் இறக்குதல், சர்க்கரை காய்ச்சுதல் ஆகியவை அரசு வேலைகளாக்கப்படும். சம்பளம் எப்படி கொடுப்பேன்? நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன். செலவு செய்து காண்பியுங்கள், செலவுகளே இருக்காது.

குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். யுகேஜி, எல்கேஜி இருக்காது. அவை அரும்பு, மொட்டு, மலர் வகுப்புகள் என அழைக்கப்படும். ஒன்றாம் வகுப்பு 6 வயதிலிருந்து தான் சேர்க்கப்படும். விளையாட்டு தான் கல்வி. தாய்மொழியில் கல்வி வழங்கப்படும்"

இவ்வாறு சீமான் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x