Published : 08 Apr 2019 08:58 PM
Last Updated : 08 Apr 2019 08:58 PM

கள நிலவரம்: விழுப்புரம் தொகுதி யாருக்கு?

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் மாம்பழம் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

இருவரும் இத்தொகுதியைச் சார்ந்தவர்கள் இல்லை என்ற ஒற்றுமை உள்ளது. கடந்த 2 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் தலா 3 தொகுதியில் அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

தொகுதியில் உள்ள பிரச்சினைகளை இருவருமே முழுவதும் அறியாதவர்கள் என்பதால் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை.

திமுக கூட்டணியில் விசிக இருந்தாலும் விசிகவைப் பிடிக்காத திமுக தொண்டன் வாக்கும், அதிமுக கூட்டணியில் இருந்தாலும் பாமகவைப் பிடிக்காத அதிமுக தொண்டன் வாக்கும் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது.

சி.வி.சண்முகம் மீதான பாமகவின் தாகுதலை அதிமுகவினர் மறந்தார்களா என்பதும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு பொன்முடியின் மகனுக்கு தேர்தல் வேலைக்கு சென்ற திமுக தொண்டர்களின் வாக்கும் வெற்றியைத் தீர்மானிக்க உள்ளது.

திமுக கூட்டணி வேட்பாளருக்கு திமுக சின்னமான உதயசூரியன் சின்னம் கிடைத்திருப்பது ப்ளஸ். அதிமுக கூட்டணியில் இருந்தாலும்  பாமக சின்னத்தில் போட்டியிடுவதாலும், வன்னியர் சங்கத் தலைவர் குரு மறைவுக்கு பின் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டு இருப்பது மைனஸ்.

பண விநியோகத்தில் அதிமுக முன்னணியில் உள்ளதால் பாமக வேட்பாளர் பிரச்சாரம் முன்னணியில் உள்ளது.விசிக வேட்பாளரின் பிரச்சாரம்  கடந்த சில நாட்களாக சூடு பிடித்துள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள இரு பெரும்பான்மை சமூக மக்கள் தங்கள் சமூகம் சார்ந்த கட்சிக்கு வாக்களிப்பார்களா என்றால் விசிகவுக்கு சாதகம் அதிகமாகவே உள்ளது.மொத்தத்தில் தற்போது கள நிலவரப்படி இழுபறியாகவே உள்ளது.

பொன்முடியும், சி.வி.சண்முகமும் எடுக்கும் நடவடிக்கைகளே வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் என்பதே யதார்த்தம்.

விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. சம அளவில் இவர்களுக்கான வெற்றி வாய்ப்பு இருப்பதால் இனி வரும் நாட்களில் நடைபெறும் 'களப்பணி'யைப் பொறுத்து யாருக்கு வெற்றி கிட்டும் எனத் தெரியவரும்.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

இணையதள கருத்துக் கணிப்பின்படி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் லேசான சதவீதத்துடன் முன்னணியில் உள்ளார். இரண்டாம் இடத்தில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பிரகலதாவும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x