Last Updated : 13 Mar, 2019 10:14 AM

 

Published : 13 Mar 2019 10:14 AM
Last Updated : 13 Mar 2019 10:14 AM

எஸ்பி, பிஎஸ்பி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க காங்கிரஸ் யோசனை

உ.பி.யில் சமாஜ்வாதி (எஸ்பி), பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தம் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க காங்கிரஸ் யோசனை செய்து வருகிறது. இதற்கு அக்கட்சிகள் தம் தலைவர்களின் அமேதி, ரேபரேலியில் வேட்பாளர்களை அறிவிப்பதில்லை என எடுத்த முடிவு காரணமாக உள்ளது.

உ.பி.யில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் அகிலேஷ்சிங் யாதவின் எஸ்பியும், மாயாவதியின் பிஎஸ்பியும் கூட்டணி அமைத்தது. இதில், அஜீத்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்த்தவர்கள் காங்கிரஸை சேர்க்கவில்லை. இதனால், வேறுவழியின்றி காங்கிரஸ் உ.பி.யின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. சிறிய கட்சிகளை தம்முடன் சேர்க்க எடுத்த முடிவையும் தற்போது காங்கிரஸ் மாற்றிக் கொண்டது.

எனினும், அகிலேஷும், மாயாவதியும், சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதியில் தம் கட்சி வேட்பாளர்களை மரியாதை நிமித்தம் நிறுத்துவதில்லை என அறிவித்தனர். இதற்கு மாற்றாக காங்கிரஸும் தனது வேட்பாளர்களை எஸ்பி மற்றும் பிஎஸ்பியின் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நிறுத்தாமல் விட்டுவைக்க ஆலோசிக்கிறது. இதன் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகும் எனத் தெரிகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’இணையதளத்திடம் தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''உ.பி.யில் காங்கிரஸுக்குப் போட்டியிட வைக்க வலுவான வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சனையால் மாயாவதிக்கு ஒன்றும், அகிலேஷ் குடும்பத்தினருக்கு 3 தொகுதிகளும் விட்டுத்தருவது கவுரவமாக இருக்கும் எனக் காங்கிரஸ் தலைமை கருதுகிறது'' எனத் தெரிவித்தனர்.

சமீபத்தில் உ.பி.யின் பிரச்சார மேடையில் பேசிய எஸ்பியின் தலைவரும் உ.பி.யின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ், இருதொகுதிகளில் வேட்பாளர் நிறுத்தாததை வைத்து காங்கிரஸும் தம் கூட்டணியில் இருப்பதாகக் கிண்டலுடன் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸின் பொதுச்செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா பதில் அளித்து பேசியிருந்தார். அதில் சிந்தியா, ''இந்த வகையில் காங்கிரஸும் 2 அல்லது மூன்று தொகுதிகளை எஸ்பி, பிஎஸ்பிக்கு விட்டுத்தரத் தயார்'' எனப் பதிலளித்திருந்தார்.

இதன்படி, எஸ்பி, பிஎஸ்பி தலைவர்களின் இரண்டு தொகுதிகள், அகிலேஷின் தந்தையும் எஸ்பி நிறுவனருமான முலாயம் சிங்கின் மெயின்புரி, அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவின் கன்னோஜ் ஆகிய நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் தன் வேட்பாளர்களைப் போட்டியிட வைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பியில் இருந்து விலகிய முலாயமின் சகோதரரான ஷிவ்பால்சிங் யாதவும் தன் புதிய கட்சியான பிரகதீஷ்சில் சமாஜ்வாதி லோகியா சார்பில் பெரோஸாபாத்தில் போட்டியிடுகிறார்.

எனவே, ஷிவ்பாலுக்காகவும் காங்கிரஸ் தன் வேட்பாளரை நிறுத்தாமல் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை அறிந்த ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜீத்சிங் தனது மற்றும் தன் மகன் ஜெயந்த் சவுத்ரியின் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்குமாறு காங்கிரஸிடம் கோரி வருகிறது.

இவர்கள் அனைவருமே பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக விடாமல் முயற்சிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x