Last Updated : 12 Mar, 2019 08:52 AM

 

Published : 12 Mar 2019 08:52 AM
Last Updated : 12 Mar 2019 08:52 AM

உதயசூரியனா.. ஏணியா? - குழப்பத்தில் முஸ்லிம் லீக்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு அக்கட்சி கோரியுள்ளது. இதற்கிடையே, அக்கட்சி போட்டியிடப்போவது திமுகவின் உதயசூரியன் சின்னத்திலா, தனது ஏணி சின்னத்திலா என முடிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்ட போது அதன் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம், ‘‘திமுக அறிவிக்கும் தொகுதியில் எங்கள் ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம்’’ என்று  தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதி தொடர்பாக முடிவு செய்ய 10-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த  காதர் மொய்தீன், “எங்களுக்கு ராமநாதபுரம் தொகுதியை தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்து மற்ற தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்" என்றார்.

இதுபற்றி ராமநாதபுரத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூறியதாவது:

2009 மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வேலூர் தொகுதியில் காதர் மொய்தீன், ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அடுத்த நாளே, வேலூர் தொகுதி வேட்பாளர் துரைமுருகனின் தொழில் நண்பரான துபாய் அப்துல் ரகுமான் என்றும், ஏணி சின்னத்துக்கு அங்கு செல்வாக்கு இல்லாததால் உதயசூரியன் சின்னத்தில் நிற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இறுதியில் அப்துல் ரகுமான் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றார்.

ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் அப்துல் ரகுமான் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனவே, முஸ்லிம் லீக் கட்சி திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் நின்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று வலியுறுத்துகிறோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காகத்தான் மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட் அளிக்காமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 5 தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டது. இதில் கடையநல்லூர் தொகுதியில் வெற்றிபெற்றது. தவிர, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதி ராமநாதபுரம். இங்கு ஏணி சின்னத்தில் எளிதாக வெற்றி பெற முடியும். எனவே, ஏணி சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போட்டியிடப்போகும் தொகுதி ராமநாதபுரம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், நிற்கப்போகும் சின்னம் ஏணியா, உதயசூரியனா என்ற விவாதம் முஸ்லிம் லீக் கட்சியினர் மத்தியில் சூடுபிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x