Last Updated : 21 Mar, 2019 03:06 PM

 

Published : 21 Mar 2019 03:06 PM
Last Updated : 21 Mar 2019 03:06 PM

டெல்லியில் பிரச்சினையும் இல்லை; வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் தாமதமும் இல்லை: தங்கபாலு பளிச் பதில்கள்

வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை இன்றோ நாளையோ பட்டியல் வெளியாகும் எனக் கூறுகிறார், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு.

2019 மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருக்கிறது. இதற்கு டெல்லியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முகாமிட்டு கட்சி மேலிடத்துக்கு சீட் விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மூத்த தலைவருமான தங்கபாலுவிடம் வேட்பாளர் பட்டியல் குறித்துக் கேட்டோம்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகத் தாமதமாகிறதே.. ஏன்?

தாமதம் ஏதும் இல்லையே. தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எங்கள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி தலைமையிடத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அதனைப் பரிசீலிக்கும் வேலை முடிந்ததும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இன்றோ நாளையோ தெரிந்துவிடப் போகிறது.

ஈவிகேஸ் இளங்கோவன் டெல்லியில் பிரச்சினை செய்வதாலேயே வேட்பாளர் பட்டியல் தாமதமாவதாகக் கூறப்படுகிறதே..

யாரும் எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை. எங்கள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அவர் வந்தவுடன் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். அதற்கிடையில் சில செய்திகள் வெளியாகின்றன. அவையெல்லாம் வெறும் ஊகங்களே.

வேட்பாளர் பட்டியலிலும் ராகுல் சொன்னதுபோல் மகளிருக்கு முக்கியத்துவம் இருக்குமா? 33% இட ஒதுக்கீட்டை எதிர்பார்க்கலாமா?

தேர்தல் அரசியலில் வேட்பாளர்களைக் களமிறக்குவது என்பது வெற்றி வாய்ப்பைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தேர்வு அமைந்திருக்கிறது. ஆனால், நிச்சயமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியென்றால் பெண்களை ஏன் வெற்றி வேட்பாளர்களாக அறிவிக்கும் அளவுக்கு காங்கிரஸ் வளர்த்தெடுக்கவில்லை?

அப்படி சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சி போல் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி வேறு எதுவுமில்லை. மாவட்டப் பிரதிநிதிகள், கட்சியின் பொதுச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள், ஏன் மாநிலத் தலைவர்களாகக் கூட பெண்கள் இருந்துள்ளனர். இருக்கின்றனர். கட்சிக்குள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால்தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம் என்று தலைவர் ராகுல் காந்தி உறுதியாகச் சொல்கிறார்.

ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என நீங்களும் விரும்புகிறீர்களா?

நிச்சயமாக விரும்புகிறேன். இது எங்கள் அனைவரின் விருப்பம். அதனால்தான், எங்கள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இதனைக் கோரிக்கையாகவே கட்சி மேலிடத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனைப் பரிசீலித்து ஏற்பதும் புறந்தள்ளுவதும் ராகுல் காந்தியின் தனிப்பட்ட முடிவு.

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்பதில் தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேற்றுமை இருக்கிறதா?

கருத்து வேற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கெனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துவிட்டார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கிறார். பக்கத்து மாநிலம் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவகவுடாவும் ராகுலை ஏற்றுக் கொண்டுள்ளார். பிஹாரில் லாலு பிரசாத் யாதவ், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கின்றனர். ராகுல் காந்திக்குப் பரவலாக ஆதரவு இருக்கிறது. மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்றோரும் தேர்தலுக்குப் பின்னர் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

மிகவும் பிரகாசமாக இருக்கிறது. ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அல்லது மோடி தலைமையில் பாஜக ஆட்சி என்ற இரண்டே வாய்ப்புகள் மட்டும்தான் மக்கள் முன்னால் இருக்கின்றன. பாஜக ஆட்சியால் சோர்வடைந்திருக்கும் மக்கள் நிச்சயமாக ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியையே அமைப்பார்கள். மக்கள் ராகுலை தலைமையாக ஏற்று வாக்களிக்கும்போதே அவர்தான் பிரதமராவார் என்பதும் உறுதியாகிவிடும்.

நாகர்கோவில் பொதுக்கூட்ட மொழிபெயர்ப்பு குறித்து இன்றளவும் விமர்சனங்கள் வருகின்றனவே..?

இந்தக் கேள்விக்கு நான் நிறைய முறை விளக்கம் அளித்துவிட்டேன். ராகுல் காந்தி பேச்சின் சாராம்சத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்பதே முடிவு. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மொழிபெயர்ப்பு செய்யவில்லையே தவிர அவரின் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x