Published : 23 Mar 2019 02:30 PM
Last Updated : 23 Mar 2019 02:30 PM

நாடார் வாக்கு வங்கியைக் குறிவைக்கிறேனா; அத்வானிக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?- தமிழிசை சிறப்புப் பேட்டி

பாஜக மருத்துவர் அணியில் தொடங்கிப் படிப்படியாக உயர்ந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். தற்போது தமிழக மாநிலத் தலைவராக உள்ள தமிழிசை, தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

ஒருபக்கம் அதிமுக கூட்டணி, தென் தமிழகத்தைச் சேர்ந்தவர், மக்களால் அறியப்பட்ட முகம் உள்ளிட்டவை பலங்களாக இருந்தாலும், வலிமையான எதிர் வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கஜா புயல், பாஜக மீதான அதிருப்தி ஆகிய காரணிகள் தமிழிசைக்கு எதிராக இருக்கின்றன. என்ன செய்யப்போகிறார் தமிழிசை?

தூத்துக்குடியில் அனல் பறக்கப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தவரிடம் 'இந்து தமிழ்' இணையதளத்துக்காகப் பேசினோம்.

எதனால் தூத்துக்குடி தொகுதியைத் தேர்வு செய்தீர்கள்?

என் அம்மாவின் ஊர் வடக்கன்குளம். தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு தூத்துக்குடியில்தான் இருந்தது. என்னுடைய ஆரம்பக் கல்வியை வடக்கன்குளத்தில்தான் முடித்தேன். நம்ம ஊரில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்தது. அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் அங்குள்ள பிரச்சினைகள் தெரியும். கட்சி சொன்னதாலும் தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்தவள் என்பதாலும் தூத்துக்குடியில் விருப்பத்துடன் போட்டியிடுகிறேன்.

நாடார்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்துதான் நீங்களும் கனிமொழியும் தூத்துக்குடியைத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறதே?

நிச்சயமாகக் கிடையாது. ஒருவேளை அவர் (கனிமொழி) வேண்டுமானால் அப்படி நினைத்திருக்க வாய்ப்பு இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. நான் என்னுடைய பேச்சு, எழுத்து, திறமை, ஆளுமை ஆகியவற்றைத்தான் பெரிதாக நம்பியிருக்கிறேன். அரசியலுக்காக வெற்றிகரமாக இயங்கிவந்த மருத்துவத் தொழிலை உதறிவிட்டு வந்தவள் நான். தென்பகுதியில் என் பணி இருக்கவேண்டும் என்ற நெடுநாளைய ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன்.

கட்சியில் நீங்கள் பல்வேறு பதவிகளில் இருந்தாலும் தேர்தல் அரசியலில் ஏன் வெற்றிவாகை சூட முடியவில்லை? கடந்த எம்எல்ஏ, எம்.பி. தேர்தல்களில் 3 முதல் 4 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றிருந்தீர்கள்...

தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கூட்டணி இல்லாதது முதல் காரணம். எங்களின் வாக்கு எண்ணிக்கை குறித்து எங்களுக்கே தெரியும். தேர்தலில் என்ன முடிவுகள் வந்தாலும் களத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணிதான் போட்டியிட்டேன். முடிவுகள் குறித்துக் கவலைப்படவில்லை.

தூத்துக்குடி தொகுதியின் தலையாய பிரச்சினைகள் என்ன? வெற்றிபெற்றால் தொகுதி மக்களுக்கு என்ன செய்வீர்கள்?

குடிநீர் தட்டுப்பாடு இங்கே அதிகமாக இருக்கிறது. அதனால் கால்வாயை வெட்டி அதன்மூலமாகத் தண்ணீர் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறேன். கடலை ஒட்டியுள்ள பகுதி என்பதால், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

பனைமரங்கள் அதிகமாக உள்ளதால் அவற்றில் இருந்து குடை, பை, கலைப்பொருட்கள், பரிசுகள் உள்ளிட்ட மதிப்புக் கூட்டுப் பொருட்களை உருவாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் வைத்துள்ளேன். இவற்றுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம். பிளாஸ்டிக் தடை என்பதால் தமிழகத்திலும் லாபகரமாக விற்க முடியும். ஓரிரு இடங்களில் ஏற்கெனவே இருந்தாலும் அவற்றை முறைப்படுத்தி பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிட்டிருக்கிறேன். அதேபோல உப்பு ஏற்றுமதி, திறன் மேம்பாட்டு மையங்களையும் உருவாக்க ஆசை.

கனிமொழி உங்களுக்குக் கடுமையான போட்டியாளராக இருப்பார் என்கிறார்களே, வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே கடந்த சில மாதங்களாக அவர் தூத்துக்குடியில் மேற்கொள்ளும் களப்பணி இதற்கு வலுசேர்க்குமா?

5 வருடங்கள் பணியாற்றியவர்களையே மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். சில மாதங்கள் எம்மாத்திரம்? நான் தேர்தல் அறிவித்த பிறகுதான் அதிகாரபூர்வமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் கனிமொழியோ கட்சியின் விதிகளையே கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். வேட்பாளராகும் முன்னரே பிரச்சாரம் செய்கிறார். அவர் தூத்துக்குடியில் நிற்கிறார் என்பதற்காக, மற்ற யாருக்கும் அங்கே விருப்ப மனு தாக்கல் செய்யும் உரிமைகூட மறுக்கப்பட்டது. இது எத்தனை பெரிய அவலம்?

கனிமொழிக்கு எதிராக உங்களின் வாதம் என்ன?

அவர் ஏற்கெனவே இரண்டு முறை எம்.பி.யாக இருந்திருக்கிறார். திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதால், சுலபமாக வாய்ப்பு கிடைக்கும். ஆனால் எனக்கு அப்படியில்லை. 20 ஆண்டுகளாக களப்பணியில் இருக்கிறேன். ஆனால் என்னுடைய நெடுநாளைய ஆசையான எம்எல்ஏ அல்லது எம்.பி. பதவி மட்டும் கைகூடவில்லை.

இதுவே அப்பாவின் வழியில் நான் காங்கிரஸில் இருந்திருந்தால் வாரிசாக அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போயிருப்பேன். சவாலான சூழலில் பாஜகவின் வெற்றிகரமான பெண் தலைவராக உள்ளேன். எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதியை 'தூய்மையான, வளர்ச்சியடைந்த தூத்துக்குடி'யாக மாற்றுவேன்.

தமிழகத்தில் பாஜக சார்பில் நிற்கும் நீங்கள் அனைவரும் பிரபலமானவர்கள், அமைச்சராகவும் கட்சியின் தலைமைப் பதவிகளிலும் இருப்பவர்கள். சிபிஆர் ஏற்கெனவே எம்.பி. பாஜகவில் சாமானியர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதா?

40 தொகுதியில் கூட்டணி போக எங்களுக்குக் கிடைத்தது 5 இடங்கள். இதில் முக்கியமானவர்கள் நின்று வெற்றிபெறுவதைத் தான் கட்சி விரும்புகிறது. நாங்கள் அனைவருமே கடினமாக உழைப்பவர்கள்தானே? போன தேர்தலில் எனக்கே வாய்ப்பு கிடைக்கவில்லை. வருங்காலத்தில் சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் தகுதியுள்ள புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

எழுவர் விடுதலை கண்டிப்பாக சாத்தியமில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளாரே...

அவரின் கருத்துக்கு நாங்கள் ஆதரவு கொடுப்பதில்லை. அவரின் கருத்து கட்சியின் கருத்து கிடையாது. சுப்பிரமணியன் சுவாமி தனிப்பட்ட வகையிலேயே கருத்துகூறிப் பழக்கப்பட்டவர். அவர் என்னைக்கூட விமர்சனம் செய்திருக்கிறார். அவரை நாங்கள் பொருட்படுத்துவதில்லை.

தமிழகத்தில் அதிகம் விமர்சிக்கப்படும் அரசியல்வாதிகளில் தமிழிசையும் ஒருவர். பொதுவெளிக்கு வந்துவிட்டாலே பெண்களை, அவர்களின் தோற்றத்தை வைத்து விமர்சிப்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? பாஜக என்பதும் ஒரு காரணமா?

பெண்களை உருவத்தைக் கொண்டு விமர்சிப்பது அவர்களின் அழுக்கான மனநிலையையே காட்டுகிறது. அறிவு, ஆளுமை, செயல்பாடுகளை விடுத்துப் பெண்ணின் நிறம், உருவம், உயரம், தலைமுடியை விமர்சிப்பது ஏன்? என்னைப் போன்ற ஓர் ஆளுமைமிக்க தலைவரை மிகக் கேவலமாக விமர்சிக்கின்றனர். இது என்னைப் பாதிக்கவில்லை என்றாலும் என் குடும்பத்தைப் பாதிக்கிறது. எப்போதும் கட்சியோடு சேர்ந்தே என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். நான் வேறு, கட்சி வேறு அல்ல.

நீட் தேர்வில் உங்களின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளாரே..

நீட் தேர்வை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். தெருக்கோடியில் இருப்பவரும் நீட் மூலம் மருத்துவராக முடியும். இதைப் பொறுக்கமுடியாத சிலர்தான் மக்களைத் திசைதிருப்பி போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்வீர்கள் என்றால், உச்ச நீதிமன்ற உத்தரவை என்ன செய்வீர்கள்? 2009-ல் ஏன் நீட்டை ஆதரித்தீர்கள்? வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்கள். நீட்டை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் உத்தி இது.

வாரிசு அரசியலை விமர்சிக்கும் நீங்கள், ஜெ. இறப்புக்குப் பிறகு வாரிசுகள் தலையெடுத்துள்ள அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே...

பெரிய ஆட்களின் பிள்ளைகள் என்பதாலேயே சீட் கொடுப்பதைத்தான் மறுக்கிறேன். ஸ்டாலினை நான் வாரிசு என்று சொல்லமாட்டேன். கட்சியில் நீண்ட காலம் பாடுபட்ட வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். வாரிசு என்பதற்காகவே கொடுக்கப்பட வேண்டியதில்லை; மறுக்கவும் வேண்டியதில்லை.

வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவிக்கும் முன்னரே எச்.ராஜாவும் வானதி ஸ்ரீனிவாசனும் அறிவித்தது ஏன்? தலைவராக அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

முன்னரே அறிவித்தது நிச்சயமாகத் தவறுதான். அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உள்நோக்கம் எதுவும் இல்லை. யூகங்களின் அடிப்படையில் பகிரப்பட்ட தகவல் இது. வருங்காலத்தில் இதுபோன்று நடக்காது, நடக்கக் கூடாது. எனக்கு இதில் வருத்தம்தான். ஆனால் தேர்தல் நேரத்தில் யாரையும் புண்படுத்தி மன அழுத்தத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி. வாஜ்பாய்க்கு அடுத்த இடத்தில் இருந்தவர். கட்சியை வெகுஜன மக்களிடையே பரவலாகக் கொண்டு சேர்த்தவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டுள்ளதே?

இதை மறுக்கப்பட்டதாக ஏன் நினைக்கிறீர்கள்? அவரே போட்டியிட வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். கட்சியின் தலைமை எடுத்த முடிவாக இருக்கலாம். 92 வயதில் தேர்தலுக்காக அவரை அலையவிடக் கூடாது என்ற நல்லெண்ணம்கூடக் காரணமாக இருக்கலாம். இனி போட்டியிட்டுத்தான் அத்வானி, தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதில்லை.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x