Published : 26 Mar 2019 12:12 PM
Last Updated : 26 Mar 2019 12:12 PM

காங்கிரஸின் குறைந்தபட்ச வருவாய் திட்டம்: இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது: கே.எஸ். அழகிரி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியளித்துள்ள குறைந்தபட்ச வருவாய் திட்டம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றுகிற முயற்சியில் நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது.

இந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிகள் செயல்படுத்தி வந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 'வறுமையே வெளியேறு' என்கிற கோஷத்தை முன்வைத்து பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை தமது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றினார்.

அதே பாதையில் கடந்த 2004 முதல் 2014 வரை நடைபெற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களால் 15 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து வெளியேற்றியதற்காக ஐநா சபையே இந்தியாவுக்கு விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. அங்கே உரையாற்றிய எல்.கே. அத்வானி 100 நாள் வேலை திட்டம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக பாராட்டியிருக்கிறார்.

கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வருகிற நரேந்திர மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்களினால் பலன்கள் மக்களிடையே முழுமையாக சென்றடையவில்லை. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 100 நாள் வேலை திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தையே மிகப்பெரிய அளவில் மாற்றி அமைத்து மக்களிடையே வாங்கும் சக்தியை உறுதிப்படுத்தியது.

அத்தகைய திட்டத்தையே நரேந்திர மோடி அரசு முறையாக செயல்படுத்தாமல் 100 நாள் வேலை திட்டம் என்பது நாடு முழுவதும் சராசரியாக 40 முதல் 45 நாட்களாக குறைக்கப்பட்டது. இத்தகைய போக்கு காரணமாக நரேந்திர மோடி அரசு வறுமை ஒழிப்பு முயற்சியில் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது.

இதிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய பொறுப்பை உணர்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நேற்று குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ள திட்டத்தின்படி மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்தினரான 5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 25 கோடி மக்கள் பயனடைகிற வகையில் ஆண்டுக்கு ரூபாய் 72 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும். இந்த தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் தான் செலுத்தப்பட இருக்கிறது.

இதன்மூலம் குடும்ப தலைவிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் ஆண்டுக்கு 172 முதல் 338 நாட்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உயர் திறன்மிக்கவர்களுக்கு 132 முதல் 254 நாட்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மொத்தம் ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி தேவை என்றும், முதல் ஆண்டில் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி தேவைப்படும் என ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி, தகவல் அறியும் உரிமை, வேலை பெறும் உரிமை, கல்வி பெறும் உரிமை, உணவு பெறும் உரிமை, உரிய இழப்பீட்டோடு நிலத்தை வழங்குகிற உரிமை போன்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்தது. இத்தகைய சாதனைகளையொட்டி தற்போது ராகுல்காந்தி வறுமைக்கு எதிராக இறுதியான தாக்குதலை தொடுத்திருக்கிறார்.

இந்த திட்டத்தின் மூலம் வறுமையில் உழலும் மக்கள் குறைந்தபட்ச ஊதியம் பெறுகிற உரிமையை சட்டரீதியாக பெற இருக்கிறார்கள். சுதந்திர இந்திய வரலாற்றில் இத்தகைய உரிமையை முதல் முறையாக காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் வறுமை மக்களிடமிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

நரேந்திர மோடி ஆட்சியில் 15 தொழிலதிபர்களுக்கு வங்கிகள் மூலமாக சலுகை அளிப்பதற்கு ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார். நரேந்திர மோடி குறிப்பிட்ட முதலாளிகளுக்காக சலுகை வழங்கியிருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ததோடு 25 கோடி மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்து வறுமைக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார். வறுமை ஒழிப்பு முயற்சியில் ராகுல்காந்தி வெற்றி பெறுவதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு அளித்து ஒத்துழைப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்" என, கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x