Published : 05 Mar 2019 08:14 AM
Last Updated : 05 Mar 2019 08:14 AM

அதிமுகவில் ‘சிட்டிங்’ எம்.பி.க்களை விட புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு

அதிமுகவில் ‘சிட்டிங்’ எம்.பி.க்கள் 70 சதவீதம் பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகின்றன என்பது 6-ம் தேதிக்கு முன்பும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் விவரம் 10-ம் தேதிக்குமுன்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 15 முதல் 18-ம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்முறையாக பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறது அதிமுக. அதனால், எந்த அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கட்சி மேலிடத்துக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அதிமுகவில் பண பலத்தை வைத்தோ,சொந்த செல்வாக்கை வைத்தோ வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை. ஜெயலலிதா இருந்தபோது, இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டது. இப்போதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

வேட்பாளரால் செலவு செய்ய முடியும் என்றால், அவர் 75 சதவீதமும், மாவட்ட அமைச்சர் 25 சதவீதமும் செலவை பங்கிட்டுக்கொள்ளுமாறு கூறப்படும். கடந்த முறை ஒவ்வொரு வேட்பாளரும் சராசரியாக ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை செலவு செய்தனர்.

அதேசமயம், இந்த முறை மாவட்டச் செயலாளர்கள், உள்ளூர் அமைச்சர்கள் பரிந்துரைக்கும் வேட்பாளருக்கு தகுதி இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

பரிந்துரைக்கப்படுபவர் மீது எவ்விதக் குற்றச்சாட்டும், குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது. உளவுத் துறை அறிக்கை அடிப்படையில் வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு, அவரது சொந்த செல்வாக்கு, ஜாதி பின்புலம், பொருளாதார பலம் ஆகியவை கணக்கில் எடுக்கப்படும். புதுமுகங்களில் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்த 10 எம்.பி.க்களில் விழுப்புரம் ராஜேந்திரன் இறந்த நிலையில் 2 அல்லது 3 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். அதேபோல, முதல்வர் பழனிசாமி தரப்பிலும் அதிகபட்சம் 3 அல்லது 4 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.

தற்போது எம்.பி.க்களாக உள்ளவர்களில் 70 சதவீதம் பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x