Published : 26 Mar 2019 12:14 PM
Last Updated : 26 Mar 2019 12:14 PM

கவுண்டர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்குமா; வைகோவை விமர்சிப்பவர்கள் யார்?- ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி சிறப்பு பேட்டி

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி, வேட்பாளராகக் களமிறங்குகிறார். சொந்த ஊரில் போட்டி, ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த அனுபவம், ஈரோடில் சாயக்கழிவு, பாதாள சாக்கடைப் பிரச்சினைகளால் ஆளுங்கட்சி மீது அதிருப்தி ஆகியவை அவருக்குப் பலமாக இருக்கிறது.

எனினும் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாகக் கூறப்படும் கவுண்டர்கள் ஆதரவு, இயல்பாகவே கொங்கு மண்டலத்தில் இருக்கும் அதிமுக செல்வாக்கு, ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பு ஆகியவை கணேசமூர்த்திக்கு பலவீனமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அவருடன் ’இந்து தமிழ் திசை’ சார்பில் நேர்காணல்:

ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிட ஆசைப்பட்ட தொகுதி ஈரோடு. இதை அவரே பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார். தற்போது நீங்கள் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருக்குமா?

இருக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை, இருக்கிறது. கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் அவர்கள் வேறுபாடுகளைப் பார்க்கவில்லை. காங்கிரஸார் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்று ராகுலைப் பிரதமராக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகின்றனர். அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தேனி தொகுதி கிடைத்திருக்கிறதே? அவரின் ஆதரவாளர்களும் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள்.

ஈரோட்டில் தனிச் சின்னத்தில் போட்டி என்று வைகோ அறிவித்த நிலையில், திடீரென்று ஏன் உதயசூரியன் சின்னத்துக்கு மாறினீர்கள். எங்கிருந்தேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா?

இப்போது எங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காத நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் சிலரின் தூண்டுதலால் கணேசமூர்த்தி என்ற பெயரில், சுயேட்சை வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது வாக்காளர்கள் இடையே எந்த வேட்பாளர் என்ற குழப்பத்தை ஏற்படுத்தும். குறுகிய காலமே உள்ள நிலையில் தனிச் சின்னத்தைவிட, மக்கள் மத்தியில் பிரபலமான உதயசூரியனின் சின்னத்தில் போட்டியிட கட்சி முடிவெடுத்தது. அதுமட்டும் அல்லாமல் மாணவர் காலத்திலேயே நான் திமுகவில் இருந்திருக்கிறேன்.

என்ன பிரச்சார வியூகம் அமைத்திருக்கிறீர்கள்?

விவசாயிகளின் பிரச்சினைகள்தான் என்னுடைய பிரச்சாரத்தின் அடிநாதம். இதே ஊரைச் சேர்ந்தவன் என்பதால் ஈரோட்டின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியும். இங்கு மஞ்சளும் தேங்காயும் பிரதான விளைபொருட்களாக இருக்கின்றன. அவற்றை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை விவசாயிகளுக்கே அளிக்க வேண்டும் என்பது என் ஆசை. மஞ்சள் விவசாயிகளுக்காக தனி வணிக வளாகம் அமைக்கும் திட்டமும் இருக்கிறது.

அனைத்து விவசாய, கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்து வருகிறேன். அதேபோல வயதானவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயை ரூ.1500 ஆக உயர்த்த வலியுறுத்துவேன். கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களும் கைவசம் இருக்கின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளத்தில் முடியும் பாண்டியாறு - பொன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றுவேன். இதன்மூலம் அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்குத் தண்ணீர் கிடைக்கும். பவானி பாசனப் பகுதியில் நிலவும் நீர்ப்பற்றாக்குறையையும் இதன்மூலம் தீர்க்க முடியும்.

கொங்கு மண்டலத்தில் உள்ள 9 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது. மற்றவை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. தோல்வி பயம்தான் காரணமா?

கூட்டணிக் கட்சிகளுக்கு எங்கு பலமிருக்கிறதோ அங்குதான் தொகுதியை ஒதுக்க முடியும். திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த சுப்பராயன். அதேபோல கோயம்புத்தூரில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர் நடராஜனும் முதலிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்தானே!

கடந்த காலங்களில் கொங்குப் பகுதி அதிமுகவைத்தானே அதிகம் ஆதரித்திருக்கிறது...

நீங்களே கடந்த காலத்தில் என்று கூறிவிட்டீர்களே.. இப்போது நிகழ்காலத்தில் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது கெயில் குழாய் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். விளைநிலங்களில் பதித்த குழாய்களை மீண்டும் எடுக்க வைத்தார். ஆனால் இன்றைய ஆட்சி அப்படியா இருக்கிறது? பதவி கிடைத்திருக்கிறது; இருக்கும் வரை இருப்போம் என்றுதான் ஆட்சியில் இருக்கிறார்கள்.

திராவிட மண்ணான தமிழகத்தில் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆதரவு பெருகி வருவதாகக் கூறப்படுகிறதே? சமீபத்தில் அமித் ஷா கூட ஈரோட்டில் உரையாற்றினார்...

இளைஞர்களை நாங்கள் களத்தில் சந்திக்கிறோம். நீங்கள் ஊடகங்களில் சந்திக்கிறீர்கள். பாஜக அலை தமிழகத்தில் வீசவில்லை. ஆதரவு பெருகி இருப்பதாகவும் நான் கருதவில்லை.

கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கவுண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான மனநிலை இருப்பதாகக் கூறப்படுகிறதே.. அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

அந்த உணர்வு கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அவை தேர்தலில் பிரதிபலிக்காது. கவுண்டர்கள் என்றில்லை அனைத்து சமுதாய மக்களுமே எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மத்திய அரசுக்கு அடிபணிந்து மாநில அதிகாரங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு முதல்வராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. வேறொன்றும் சொல்லும்படி இல்லை.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கே 2 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கும்போது ஏன் மதிமுகவுக்கு மட்டும் ஒரு சீட்?

தொகுதிப் பங்கீடு குறித்துக் கட்சித் தலைவரைத்தான் கேட்க வேண்டும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

அதிமுக வேட்பாளர் தேர்வின்போது உட்கட்சிப் பூசல் ஏற்பட்டதாகவும் இதனால் கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே. இது தேர்தலில் எதிரொலிக்குமா?

அப்படி நடந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் அதுகுறித்துக் கருத்து சொல்ல இயலாது.

கருணாநிதியுடன் நெருங்கிப் பழகியவர் நீங்கள். இப்போது ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறீர்கள். இருவரும் எப்படி வேறுபடுகிறார்கள்?

கலைஞருக்கு நிகர் அவரேதான். ஆளுமைமிக்கவர். ஸ்டாலினுடன் அதிகம் பழகியதில்லை. சிறந்த தலைவர் அவர். மக்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு நல்ல வரவேற்பு இருப்பதைக் கண்கூடாகவே காண்கிறேன்.

திமுக, அதிமுக என்று மாறி மாறிக் கூட்டணிக் குதிரையில் வைகோ சவாரி செய்கிறார், அவர் இருந்தால் மிகவும் ராசி என்றெல்லாம் வைகோ மீது சரமாரியான விமர்சனங்கள் எழுப்பப்படுகிறதே?

வைகோவை ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும்தான் விமர்சனம் செய்கின்றன. எங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்யுங்கள் என்று அவரை தினந்தோறும் வலிய அழைக்கும் நபர்கள் ஏராளமாக இருக்கின்றனர். மக்கள் மத்தியிலும் அவருக்கு பெருத்த ஆதரவு இருக்கிறது. கடந்த காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது திராவிட இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் திமுக கூட்டணியில் உள்ளோம்.

இவ்வாறு கணேசமூர்த்தி தெரிவித்தார்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x