Published : 30 Mar 2019 06:13 AM
Last Updated : 30 Mar 2019 06:13 AM

மத்திய அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றும் ஆந்திர முதல்வரின் பெயர் ‘ஸ்டிக்கர் பாபு’: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தனது குடும்ப நலனுக்காக பாடுபடுகிறாரே தவிர, தெலங்கானா மக்களின் நலனுக்காக பாடுபடவில்லை. மகன், மகள், மருமகன் என தனது குடும்பத்தினருக்கு பதவி கொடுத்து அவர் அழகு பார்க்கிறார். குடும்ப அரசியல் மற்றும் மத அரசியலுக்கு கேசிஆர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். தெலங்கானாவில் அவரது டிஆர்எஸ் கட்சியும் எம்ஐஎம் கட்சியும் இணைந்து மதம் சார்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.

மக்களை அலட்சியம் செய்யும் கேசிஆர் ஒருபுறமும் மக்களுக்காகவே உழைக்கும் பாஜக மறுபுறமும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் யார் வேண்டும் என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள்.

தெலங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், இருவழி ரயில்பாதைகள் போன்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது. ஏழைகளுக்கு வீடு கட்டித்தர போதிய நிதியை ஒதுக்கியது. ஆனால் இவற்றை எல்லாம் தனது சாதனைகளாக கேசிஆர் கூறிக்கொள்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி பெண்களுக்கு காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டன. எனவே நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பின்னர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “சந்திரபாபு நாயுடு பொய் வாக்குறுதிகளை கொடுத்தே மக்களை ஏமாற்றி வருகிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தனது பெயரை சூட்டிக்கொள்கிறார். இதனால் அவரை ஸ்டிக்கர் பாபு என்றும் மக்கள் அழைக்கின்றனர். போலாவரம் அணைக்கட்டுக்கு மத்திய அரசு இதுவரை ரூ. 7 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. ஆயினும் இத்திட்டம் அந்தரத்தில் நிற்கிறது. ஆந்திர அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. ஆனால் இதனை சந்திரபாபு நாயுடு மூடி மறைக்கிறார். மாநிலத்திலும், மத்தியிலும் பாஜ ஆட்சி மலர்ந்தால் மாநிலத்தின் வளர்ச்சி இரு இன்ஜின் பொருத்திய ரயில்போல வேகமாக இருக்கும் இதற்காக பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x