Last Updated : 26 Mar, 2019 07:38 AM

 

Published : 26 Mar 2019 07:38 AM
Last Updated : 26 Mar 2019 07:38 AM

கூட்டணி அமைக்கவே திணறும் இடதுசாரிகள்!

நாடாளுமன்ற மக்களவையில் 59 எம்.பி.க்கள் என்று 2004-ல் பெருமித நிலையில் இருந்த இடதுசாரிகள், படிப்படியாகத் தேய்ந்து இப்போது கூட்டணிக்குக்கூட மாநிலக் கட்சிகள் சேர்த்துக்கொள்ளத் தயங்கும் நிலைக்குக் கீழிறங்கிவிட்டன. தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்தாலும் பரவாயில்லை என்று கூறினாலும் யாரும் செவிசாய்ப்பதாக இல்லை.

இடதுசாரி கட்சிகளிலேயே அதிகத் தொண்டர் களையும் அதிக மாநிலங்களில் கிளைகளையும் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வங்கத்தில் அவமானப்படுத்திவிட்டது காங்கிரஸ். ‘இரு கட்சிகளும் வெற்றிபெற்றுள்ள மக்களவைத் தொகுதிகளில் மீண்டும் அதே கட்சிகளே போட்டியிடலாம், எதிர்த்து வேட்பாளரை நிறுத்த வேண்டாம்’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்த யோசனையை காங்கிரஸ் ஏற்கவில்லை.

எட்டுத் திக்கும் கைவிரிப்பு

பிஹாரில் ஒரு தொகுதியைக்கூடத் தர மறுத்துவிட்டது லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தள் (ஆர்ஜேடி). மகாராஷ்டிரத்தில் விவசாயிகளின் மிகப் பெரிய பேரணியை நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சி. மாநிலத் தலைநகரம் மும்பை நோக்கி நடந்த அந்தப் பேரணிக்கு மும்பை நகரவாசிகள்கூட வரவேற்று ஆதரவு தந்தனர். இருந்தும், திண்டோரி மக்களவைத் தொகுதியை இடதுசாரிகளுக்கு ஒதுக்க முடியாது என்று மறுத்துவிட்டது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி. கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு எதிரான உணர்வு அதிகம் இருப்பதால் ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதிகள் கிட்டும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இடதுசாரி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதே நிலைதான். பிஹாரில் ஆர்ஜேடி தங்களுக்கு நிச்சயம் ஒரு தொகுதியைத் தரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்தது. ஆனால், கடைசி நேரத்தில், தொகுதி தர முடியாது என்று கைவிரித்துவிட்டது.  

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடதுசாரிகளை நம்மோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் எவ்வளவோ வற்புறுத்தியும் ஹசாரிபாக் தொகுதியை விட்டுத்தர காங்கிரஸ் மறுத்துவிட்டது. உத்தர பிரதேசத்திலும் ஒரு தொகுதிகூட இடதுசாரிகளுக்குத் தர முடியாது என்று மறுத்துவிட்டது காங்கிரஸ்.

“இடதுசாரி கட்சிகளுக்கு இப்படியொரு பின்னடைவு ஏற்பட்டிருப்பது வியப்பல்ல; சோவியத் ஒன்றியம் சிதைந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியாவதுதான் வியப்பு. ஒரு ஜனநாயக நாட்டில் இடதுசாரி சக்திகள் மிகவும் அவசியம். ஆனால், இடதுசாரி கட்சிகள் இப்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்தால் அவற்றால் இடதுசாரிகளுக்குரிய பங்கினை ஆற்ற முடியாது” என்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ்.

தங்களுடைய அரசியல் வியூகத்தை முற்றாக மாற்றியமைக்க வேண்டுவது அவசியம் என்பதை இடதுசாரித் தலைவர்களெல்லாம் ஒப்புக்கொள்கிறார்கள். “இடதுசாரி கட்சிகளின் தத்துவார்த்த சிந்தனைகளுக்கு இருக்கும் செல்வாக்குக்கும் தேர்தலில் அந்தக் கட்சிகள் பெறும் தொகுதிகளுக்கும் சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஏன் இந்த இடைவெளி? இதை இடதுசாரிகள் பகுப்பாய்ந்து, தக்க அரசியல் வியூகத்தை வகுக்க வேண்டும்” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா.

இடதுசாரிகளுக்குத் தண்டனையா?

எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தபோது, பிரதமர் பதவியை ஏற்கவிடாமல் வங்க முதலமைச்சர் ஜோதிபாசுவுக்குத் தடை விதித்ததுக்காகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்த விலக்கிக்கொண்டதுக்காகவும் இடது சாரிகள் தண்டனைக்குள்ளாகிறார்களா? “அவ்விரு முடிவுகளும் வாக்காளர்களுக்குத் தங்கள் கட்சி பதில்சொல்லக் கடமைப்பட்டது என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டன” என்கிறார் சீதாராம் யெச்சூரி.

“தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளின் பேரில்தான் மக்கள் எங்களைச் சில தொகுதிகளில் வெற்றிபெற வைத்தார்கள். அந்நிலையில் பிரதமர் பதவியை ஜோதிபாசு ஏற்றுக்கொண்டு, வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற முடியாமல்போனால், மக்களுக்குப் பெரிய துரோகம் செய்ததாகிவிடும் என்று தான் அவரைப் பிரதமர் பதவியை ஏற்க வேண்டாம் என்று தடுத்தோம்” என்கிறார் யெச்சூரி.

“ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தந்த ஆதரவை விலக்கிக்கொண்டதுகூட எங்களுடைய முடிவல்ல, காங்கிரஸ்தான் அதை எங்கள் மீது திணித்தது” என்கிறார் யெச்சூரி. 2004 முதல் 2014-க்குள் இடைப்பட்ட பத்தாண்டுகளில் மக்களவையில் 59 இடங்கள் என்ற உச்சத்திலிருந்து 11 ஆகக் குறைந்து மிகப் பெரும் சரிவைச் சந்தித்துவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறார் அவர்.

எதிரிகளுக்குச் சாதகம்

“ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியது, வங்காளத்தில் பிற அரசியல் சக்திகள் எங்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் தீவிரமாகச் செயல்பட வழிவகுத்தது. ஆர்எஸ்எஸ், நக்சலைட்டுகள், காங்கிரஸ் ஆகியவை எங்களுக்கு எதிராகச் செயல்பட்டன. வங்க இடதுசாரி முன்னணி ஆட்சியில் அரசியல்ரீதியாகவும் நிர்வாகரீதியாகவும் சில பலவீனங்களும் ஏற்பட்டன. இவற்றை நாங்கள் திருத்த நடவடிக்கைகளும் எடுத்தோம். ஆனால், அது காலம் கடந்த செயல்” என்கிறார் யெச்சூரி.

மக்களவைப் பொதுத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தங்களுடைய சரிவை எப்படித் தடுப்பது என்ற கேள்விக்கான விடை இடதுசாரிகளிடம் இல்லை. “சிறிய அளவில் அரசியல் சமரசத்துக்கு இடதுசாரிகள் முன்வந்திருந்தால், அரசியல் சக்தியாக அவர்களால் நிலைத்திருக்க முடியும்; இடதுசாரி சித்தாந்தத்துக்கு முழு விசுவாசிகளாகத் தொடர்ந்தால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. அவர்களுக்கு எதிர்காலம் உண்டு என்று யாராவது கூறினால் எனது பதில் – ஆம்; ஆனால், அவர்கள் இடதுசாரிகளாக இல்லாதபோது” என்கிறார் யோகேந்திர யாதவ்.

- ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x