Last Updated : 30 Mar, 2019 06:34 AM

 

Published : 30 Mar 2019 06:34 AM
Last Updated : 30 Mar 2019 06:34 AM

ஜெ. தங்கிய வீட்டில் ஈவிகேஎஸ்; இளங்கோவன் வீடு ‘சென்டிமென்ட் வெற்றியை தருமா?

தேனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி இருந்த வீட்டில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தங்கி பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஜெயலலிதாவைப் போல நாங்களும் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்று ‘வீடு சென்ட்டிமென்ட்’ பற்றி கட்சியினர் கூறி வருகின்றனர்.

மூன்று முதல்வர்கள்

எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என்று மூன்று முதல்வர்களை உருவாக்கிய தொகுதி என்பதால் பலரது கவனத்தையும் தேனி ஈர்த்துவருகிறது. 84-ல் எம்ஜிஆர், 2002, 2004-ல்ஜெயலலிதா ஆகியோர் ஆண்டிபட்டியில் வெற்றி பெற்று முதல்வர் ஆகியுள்ளனர்.

அதேபோல் போடி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் நிலைக்கு உயர்ந்தார்.

அதிமுகவினருக்கு மிகவும் சென்டிமென்ட் தொகுதி என்பதால் தேர்தல் காலங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

குறிப்பாக, ஜெயலலிதா போட்டியிட்டபோது பெரும் ஆரவாரமாக இருந்தது. ஜெயலலிதாவும் தேனி என்ஆர்டி. நகரில் உள்ள மினி பங்களாவில் தங்கி பிரசாரப் பணிகளை மேற்கொண்டார். இத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றிபெற்றதும் அதிமுகவினர் அந்த வீட்டை சென்ட்டிமென்ட்டாக பார்க்கத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து, 2004-ல்ஆண்டிபட்டியில் போட்டியிட்டபோது சென்டிமென்ட் காரணமாக மீண்டும் அதே வீட்டிலேயே ஜெயலலிதா தங்கினார். அந்த முறையும் வெற்றி பெற்றார்.

இதேபோல் சென்னையில் இருந்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் ஆரூண் இதே சென்டிமென்ட்டில் ஜெயலலிதா தங்கிய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பிரசாரப் பணிகளை மேற்கொண்டார். அந்த தேர்தலில் அவரும் வெற்றி பெற்றார்.

இதனால் ஜெ. தங்கிய வீடு பல கட்சியினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஜெயலலிதா தங்கியிருந்த வீட்டை தற்போது வாடகைக்கு எடுத்துள்ளார். நேற்று இந்த வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ராசியான வீடு என்பதால் ஜெயலலிதாபோல இளங் கோவனும் மிகப் பெரிய வெற்றிபெறுவார் என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x