Last Updated : 24 Mar, 2019 04:05 PM

 

Published : 24 Mar 2019 04:05 PM
Last Updated : 24 Mar 2019 04:05 PM

பாஜகவைத் தோற்கடிக்க வேண்டுமெனில் தொகுதிப் பங்கீட்டில் எதிர்க்கட்சிகள் தியாக உணர்வோடு செயல்பட்டிருக்க வேண்டும்: சுதாகர் ரெட்டி பேட்டி

பாஜகவுக்கு எதிரணியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவைத் தோற்கடிக்கும் இடங்களைக் கண்டறிந்து அவ்விஷயத்தில் மற்றவர்களுக்கு வழிவிட்டு விட்டுக்கொடுத்திருக்க வேண்டும்; ஆனால் அப்படி செய்ததுபோலத் தெரியவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மற்ற பிராந்திய கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்த அகில இந்திய அளவிலான குளறுபடிகிளை அலசி ஆராந்து சுதாகர் ரெட்டி பிடிஐக்கு அளித்த பேட்டி:

காங்கிரஸில் தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை ராகுல் காந்தியே நேரடியாகத்தானே செயல்பட்டார்?

அப்படி நடக்கவில்லை; மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களுக்கான கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் ராகுல் காந்தி பெரும்பாலான இடங்களில் மாநில காங்கிரஸ் தலைவர்களிடமே ஒப்படைத்துவிட்டார். இது சரியல்ல. அது பல இடங்களில் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முறியும் நிலைக்குச் சென்றுவிட்டது.

இதுபோன்ற தருணங்களில் காங்கிரஸ் இன்னும் தாராள மனப்பான்மையுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்.

மற்ற கட்சிகளுடன் அவர்களது புரிதல் எவ்வாறு உள்ளது என்பதை அவரது கட்சியின் மாநிலக் கமிட்டிகள் சரியாக உறுதிப்படுத்தவே இல்லை. மேலும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தோல்விக்கு இதுதான் காரணம்.

எதிர்க்கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தோல்விக்கு என்ன காரணம்?

அங்கங்கே உள்ள உள்ளூர் அரசியல்தான் காரணம். மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய கட்சியின் தலைமை என்பது முக்கியப் பொறுப்பு வாய்ந்தது என்று நான் நம்புகிறேன். அவர்கள் உள்ளூர் அரசியலை மையப்படுத்தி இயங்கினால் குறுகலான பார்வைதான் கிடைக்கும்.

ஆனால் அவர்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிரானவர்கள். அப்படியிருக்க இணைந்து செயல்பட என்ன செய்ய வேண்டும் என்றுதானே யோசிக்க வேண்டும். ஆனால் அவர்கள் பாஜகவைத் தோற்கடிக்கவேண்டுமென்பதையே மறந்தனர். தொகுதிப் பங்கீட்டில் யாரும் தியாகம் செய்வதாக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

முக்கியமாக இந்த பாதிப்பு எங்கெங்கு நடந்ததென சொல்லுங்கள்?

மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. காங்கிரஸும் இதர பிராந்தியக் கட்சிகளும் உள்ளூர் அரசியலை விட தேசிய நலன்கள் மிக முக்கியமானது என்பதில் போதிய பார்வை இல்லாததையே இது காட்டுகிறது.

தேர்தலுக்கு முன்பு இதர கட்சிகளை காங்கிரஸ் தலைவர் கையாண்டது சரியான அணுகுமுறையல்ல. எப்படியெனில் அந்தப் பொறுப்பை முழுவதுமாக மாநிலத் தலைமைகளிடம் அவர் ஒப்படைத்துவிட்டார். தொகுதிப் பங்கீட்டில் அவர்களே கையாளும்விதமாக அதிக சுதந்திரம் அளித்தார். அது தவறு.

தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை இடதுசாரி முன்னணிகளோடு மாநில காங்கிரஸ் கட்சி நடந்த பேச்சுவார்த்தைகள் மிகப்பெரிய தோல்வியைத் தழுவின. 

பிஹாரிலும் இடது முன்னணிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படவில்லை. அவர்களுக்கு ஒரு சீட் கொடுக்கத் தயாரில்லாத மோசமான உள்ளூர் குறுகிய அரசியல் மனப்பான்மையில் எதிர்க்கட்சியினருடனான கூட்டணியை அது இழந்தது.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக?

மேற்கு வங்கத்தில் தொகுதிவாரியாக உள்ள வாக்காளர் நிலவரத்தின்படி நாங்கள் காங்கிரஸுக்கு 12 தொகுதிகள் தருவதாகக் கூறினோம். அந்த இடங்களில் ஏற்கெனவே அவர்கள் நான்கு இடங்களை வென்றிருந்தனர். மற்ற 8 இடங்களில் இரண்டாவதாக வந்தனர். ஆனால் தற்போது 17 இடங்களை தங்களுக்கே தர வேண்டுமென அவர்கள் கேட்டனர். அதனாலேயே பேச்சுவார்த்தை அங்கு தோல்வியடைந்தது.

பிஹாரிலும் கூட லாலு பிரசாத் யாதவுடன் எங்களுக்கு ஒரு நல்ல புரிந்துணர்வு இருந்தது. ஆனால் அவரது மகனிடம் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் என்ன பேசினார்களோ தெரியவில்லை. அவர்கள் தனித்து இயங்குவது என முடிவு செய்துவிட்டார்கள்.

காங்கிரஸ் அணுகுமுறை இன்னும் எப்படி இருந்திருக்கவேண்டும்?

இதுபோன்ற தருணங்களில் காங்கிரஸ் கட்சி இன்னும் சற்று முன்னதாகவே இப்பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி தொகுதிப் பங்கீடு பிரச்சினைகளை கூடியவரை சுமுகமாக முடித்திருக்க வேண்டும். கூடுதல் சிரத்தையெடுத்து இப்பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்த பல்வேறு இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியைச் சந்தித்தது. இந்தி பேசும் முக்கியமான மாநிலங்களிலேயே பாஜகவை மக்கள் ஓரங்கட்டியதும் வெகு சமீபத்திய முடிவு. இப்படியிருக்கையில், காவிக் கட்சியைத் தோற்கடிப்பதில், எதிர்க்கட்சிகள் கீழ்மட்டத்திலேயே இன்னும் புரிதல் பிரச்சினைகளை சரிசெய்ய போராடிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

இதனால் தேர்தல் முடிவில் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சுகிறீர்களா?

நிச்சயமாக. தேர்தலில் எதிர்மறையான விளைவையே இது ஏற்படுத்தும். தேசிய அளவிலான ஒரு கூட்டணி சாத்தியமில்லை என்றே நாங்கள் சொல்லி வந்தோம். ஆனால் எதிர்க்கட்சிகளிடையே ஓரளவுக்கேனும் புரிந்துணர்வு செயல்பாடு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக உத்திரப்பிரதேசத்திலும், பிஹார், டெல்லி உள்ளிட்ட இன்றும் சில மாநிலங்களிலும் இது நடக்கவில்லை. இது நிச்சயமாக தேர்தலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

சரி அடுத்து இதற்கு என்ன தீர்வு?

தேர்தல் முடிவுக்குப் பின்னரான ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் நம்முன் இருக்கும் சாத்தியமாகக் கூடிய ஒரே தீர்வு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தெந்தக் கட்சிகளோடு கூட்டணி? எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது?

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியோடு கூட்டணி வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி. ஒடிசாவில் காங்கிரஸ் உடன், பஞ்சாப்பில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மற்றும் ஆம் ஆத்மியுடன் பிரிந்துசென்ற அணியோடு கூட்டணி. ஆந்திராவில் பிஎஸ்பி, ஜனசேனா மற்றும் சிபிஎம் ஆகிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

2019 மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 50 இடங்களில் போட்டியிடுகிறது.

''மோடியை அப்புறப்படுத்துவோம், நாட்டைக் காப்பாற்றுவோம்'' - என்ற கோஷத்தோடு நாட்டின் 17-வது பொதுத் தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம்.

நேர்காணல்: அனன்யா சென்குப்தா, தமிழில்: பால்நிலவன்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x