Last Updated : 24 Mar, 2019 07:25 AM

 

Published : 24 Mar 2019 07:25 AM
Last Updated : 24 Mar 2019 07:25 AM

கர்நாடக கட்டிட விபத்து பலி 14 ஆனது; 62 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் வந்த இளைஞர்

கர்நாடக மாநிலம் தார்வாட் டவுனில் 5 மாடி வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீயணைப்பு படையினர் இரவு பகலாக மேற்கொண்ட மீட்புப் பணியில் இதுவரை 64 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் தளத்தில் தூணை அகற்றியபோது 24 வயதான சங்கமேஷ் ராமகவுடா என்பவர் உயிருடன் வெளியே நடந்து வந்தார். விபத்து நடந்து 62 மணி நேரத்துக்கு பின்பு தெம்புடன் ஆம்புலன்ஸ் வரை நடந்து சென்ற இளைஞரை கண்ட மீட்புக் குழுவினரும், பொதுமக்களும் ஆச்சரியம் அடைந்தனர். சங்கமேஷ் அளித்த தகவலின் அடிப்படையில் மீட்புக் குழுவினர் கணவன், மனைவியை உயிருடன் மீட்டனர்.

இந்நிலையில் நேற்று தரை தளத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கணிணி பயிற்சி மையத்திற்கு வந்த 12 மாணவர்கள் இன்னும் மீட்கப்படாததால், அவர்களது பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர். அங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

விபத்து குறித்து தார்வாட் ஆட்சியர் தீபா ராஜராஜ சோழன் கூறும்போது, “கட்டிடத்தின் உரிமையாளர் கங்கப்பா ஷிண்ட்ரே, பொறியாளர் விவேக் பவார், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் ரவி பசவராஜ், பசராஜ் நிகடி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x