Last Updated : 19 Mar, 2019 11:27 AM

 

Published : 19 Mar 2019 11:27 AM
Last Updated : 19 Mar 2019 11:27 AM

பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி: அதிமுக வேட்பாளராக சதன் பிரபாகர் தேர்வானது எப்படி?

பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகருக்கு அவரது தந்தையின் முயற்சி மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பரிந்துரையாலும் சீட் கிடைத்துள்ளது.

பரமக்குடி (தனி) சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரனின் ஆதரவாளரான டாக்டர் முத்தையா மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் பரமக்குடி நகர் இளைஞரணி அமைப்பாளராக உள்ள எஸ்.சம்பத் குமார் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ள சதன் பிரபாகரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள சதன் பிரபாகரன், கடந்த 3 பொதுத் தேர்தல்களில் எம்எல்ஏ சீட் கேட்டு விண்ணப்பித்தார். தற்போதுதான் இவருக்கு சீட் கிடைத்துள்ளது.

பி.இ., எம்.பி.ஏ., பி.எல்., பட்டம் பெற்றுள்ள இவர் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் செக்ஷன் கண்ட்ரோலராக பணியாற்றி 2006-ல் கட்சிப்பணிக்காக வேலையைத் துறந்தார். 2007-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வென்று, கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் பணி கிடைத்தும், கட்சிப்பணிக்காக வேலைக்குச் செல்லவில்லை. முதலில், முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜூக்குத்தான் சீட் என கட்சி நிர்வாகிகளால் பேசப்பட்டது. சுந்தரராஜன் எளிதில் வெற்றி பெறக்கூடியவர் என்று கருத்து கட்சியினரிடையே இருந்தது.

இவர் ஏற்கெனவே 1989, 1991, 2011 என மூன்று முறை இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். 2006-ல் நின்று காங்கிரஸ் வேட்பாளர் ராம்பிரபுவிடம் தோல்வியடைந்தார். 2016-ல் சீட் வழங்கப்படவில்லை, அதனால் இந்த முறை சீட் வழங்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் சுந்தரராஜ் கடுமையாக மோதினார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அதற்குக் காரணம் அமைச்சர் எம்.மணிகண்டன், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகிய இருவருமே சுந்தரராஜ் போட்டியிடுவதை விரும்ப வில்லை.

சதன் பிரபாகர் ஜெயலலிதா பேரவையின் மாநில நிர்வாகியாக உள்ளதால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவும் இருந்தது. மேலும், சதன் பிரபாகரின் தந்தை நிறைகுளத்தான், பரமக்குடி தொகுதி பொறுப்பாளராக உள்ள அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் நண்பராவார். அதனால் அவர் மூலம் தனது மகனுக்கு சீட் கேட்டுள்ளார். இதன் காரணமாக சதன் பிரபாகருக்கு சீட் கிடைத்துள்ளதாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x