Published : 27 Mar 2019 11:36 AM
Last Updated : 27 Mar 2019 11:36 AM

பிரச்சாரத்தைப் பாதியில் நிறுத்தி ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட எடப்பாடி பழனிசாமி

சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி, அதைப் பாதியில் நிறுத்தி ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவத்தை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், தமிழத்தில் அதிமுக பாஜகவுடனும் திமுக காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் பழனிசாமி சென்னையில் தனது 2-வது நாள் தேர்தல் பிரச்சாரத்தை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகில் இருந்து தொடங்கினார். பின்னர் சிந்தாதிரிப்பேட்டை, சூளை, அயனாவரம், டி.பி.சத்திரம், சி.எம்.டி.ஏ. காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் பழனிசாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அயனாவரத்தில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அங்கே குழுமி இருந்தனர். அப்போது அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து வந்தது.

கூட்டம் அதிகமாக இருந்ததால், அதன் வழியாக ஆம்புலன்ஸால் செல்ல முடியவில்லை. சாலையிலேயே வண்டி தேங்கி நின்றது. இதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தைப் பாதியில் நிறுத்தினார்.

தன்னுடைய பிரச்சார வண்டியைத் தள்ளி நிறுத்தச் சொன்ன அவர், பொதுமக்களும் ஒதுங்கி வழிவிடுமாறு கேட்டுக்கொண்டார். காவலர்கள் போக்குவரத்தை ஒருங்கிணைக்க, ஆம்புலன்ஸ் தடையின்றி சென்றது. இதைப் பார்த்த மக்கள், கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இதுதொடர்பான வீடியோவைக் காண

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x