Published : 30 Mar 2019 08:12 AM
Last Updated : 30 Mar 2019 08:12 AM

ஐபிஎல் மக்களவைத் தேர்தல்- நாடு முழுவதும் 8 கூட்டணிகள் மோதல்

100% அக்மார்க் கற்பனை செய்தி

5 நாட்கள் மட்டையை தட்டிக்கொண்டே இருந்த கிரிக்கெட் ‘ஒருநாள்’ ஆக சுருங்கி, இப்போது 20 ஓவர் என ஸ்லிம்மாகிவிட்டது. டி-20 தான் இப்போது கெத்து. இதுபோல ஐபிஎல் பாணியில் தேர்தல் திருவிழாவை நடத்தினால் என்ன.. இனி அந்த கற்பனைச் செய்தி.

தேர்தல் நடைமுறை மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி, இனிமேல் மக்களவைத் தேர்தல் ‘ஐபிஎல் (இந்தியன் பொலிடிக்கல் லீக்) தேர்தல்’ என்ற பெயரில் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மறுசீரமைப்பு ஆணையம் சார்பில் 8 கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நமக்கு நன்கு பரிச்சயமான பல்வேறு கட்சிகளின் கொள்கைகள், கருத்துகள், அவர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் ‘இந்தியன்ஸ்’, ‘ஆன்ட்டி இந்தியன்ஸ்’, ‘டுமீல் போராளீஸ்’, ‘ஆர்ப்பாட்டர்ஸ்’, ‘கும்பிட்டர்ஸ்’, ‘அட்டாக்கர்ஸ்’ என்று 6 கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் தங்கள் வாரிசுகளை களமிறக்க வசதியாக, ‘வாரிசூஸ்’ என்று பிரத்யேகமாக ஒரு கூட்டணியும், தேர்தலுக்கு தேர்தல் இடம் மாறுபவர்களுக்கு வசதியாக ‘சந்தர்ப்பாஸ்’ என்று ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பிரதானமான கட்சிகள் தங்களுக்குள் அணி சேர்ந்து முதலில், இந்த கூட்டணிகளை ஏலத்தில் எடுப்பார்கள். பின்னர் தங்களுக்கு தேவையான வேட்பாளர்களை தங்கள் கட்சியில் இருந்தும், வெவ்வேறு கட்சிகளில் இருந்தும் ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஏலம் என்பது அதிகாரபூர்வ நடைமுறை ஆக்கப்படுவதால், கட்சிகளுக்கு, வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதற்கும் தடையில்லை.

(ஒட்டுமொத்த ஐபிஎல் தேர்தலும் பணத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால், வாக்காளர்களை ஏலத்தில் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அது பரிசீலிக்கப்பட்டு, வரும் தேர்தல்களில் அமல்படுத்தப்படும்.)

முதலில் லீக் முறையில் தேர்தல் நடத்தப்படும். லீக் சுற்றில் மொத்தம் 56 வாக்குப்பதிவுகள் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு கூட்டணியும் இருமுறை தங்களுக்குள் மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களைப் பெறும் கூட்டணிகள், புள்ளிகள் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

லீக் தேர்தலில் முதல் 2 இடங்களைப் பெறும் கூட்டணிகள், முதல் தகுதித் தேர்தலில் மோதும். இதில் தோல்வியடையும் கூட்டணி, 2-வது வாய்ப்பாக மற்றொரு தகுதித் தேர்தலில் மோதலாம்.

3, 4-வது இடங்களைப் பெறும் கூட்டணிகள் எலிமினேட்டர் தேர்தலில் மோதும். இதில் வெற்றி பெறும் கூட்டணி, முதல் தகுதித் தேர்தலில் தோல்வியடைந்த கூட்டணியுடன் மோதும். 2-ம் தகுதித் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி, இறுதி தேர்தலுக்கு தகுதி பெறும்.

இறுதி தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி, ஆட்சியமைக்க அழைக்கப்படும். அதன் சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் அனைவரும் எம்.பி.யாக பொறுப்பேற்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x