Published : 03 Mar 2019 09:06 AM
Last Updated : 03 Mar 2019 09:06 AM

சொந்த மண்ணான ராமநாதபுரத்தில் களமிறங்குகிறாரா கமல்?

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் தொகுதியில் நிற்க திட்டமிட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கமல்ஹாசன் தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்ட மண்ணில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து 21.02.2018-ல் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதுதொடர்பான நிகழ்ச்சிகளில் முழுவீச்சில் பங்கேற்று வருகிறார்.

மக்களவைத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் சேராமல், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட கமல் முடிவு செய்துள்ளார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து விருப்ப மனு பெறும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ராமநாதபுரம் தொகுதியில் கமல் நிற்க வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் பலர் மனு அளித்து வருகின்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:புதிய கட்சி, அரசியல் குழந்தை என்று விமர்சிக்கப்பட்ட கமலுக்கு, கிராமசபை கூட்டங்களின்போது மக்கள் அளிக்கும் வரவேற்புதான் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் துணிச்சலைத் தந்துள்ளது.

அவரை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வருகிறோம். அது அவரது சொந்த மாவட்டம் என்பதால் மட்டுமல்ல, கமலின் தந்தை டி.சீனிவாசன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறந்த வழக்கறிஞர். மக்களிடையே நன்மதிப்பு பெற்றவர். எனவே, கமல் இத்தொகுதியில் வெற்றிபெற்றால் மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x