Published : 27 Mar 2019 05:06 PM
Last Updated : 27 Mar 2019 05:06 PM

ஜூன் 3-ம் தேதிக்குப் பிறகு ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள்: குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டத்துக்கு ஸ்டாலின் வரவேற்பு

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கும் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் குறைந்தபட்ச ஊதிய உறுதித்திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் திட்டத்தை திமுக சார்பில் மனமார வரவேற்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில் ஏழைகளின் வாழ்வாதாரம் தான் முதலில் பறிக்கப்பட்டது. விலைவாசி உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி சட்டம் போன்றவற்றால் பல லட்சக்கணக்கான சிறு தொழில்கள் நாடு முழுவதும் மூடப்பட்டன. வேலைவாய்ப்பின்மை 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு பாஜக ஆட்சியில் ஏற்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமான ஆய்வு முடிவுகளே வெளிப்படுத்தின.

மக்களுக்கு நெருக்கடியான நிலையில் அவர்களை கை தூக்கி விட வேண்டிய பாஜக அரசோ, அவர்கள் தலை தூக்கி விடாதபடி தாங்க முடியாத சுமையை ஏற்றி வைப்பதிலேயே ஆர்வமாக இருந்தது. தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் சூறையாடப்பட்டு விட்டதாக எண்ணிய ஏழை எளிய மக்களுக்கு பாஜக அரசு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் கடந்த ஐந்தாண்டு காலத்தில் 'கார்ப்பரேட்' அரசாகவும், 'விளம்பர அரசாகவும்' ஆட்சியை நிறைவு செய்து விட்டது.

நம்பி வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு விட்டுச் செல்கிறது பாஜக அரசு. நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவுக்குள்ளாகி - தொழில்துறை பாதிக்கப்பட்டு - வேலைவாய்ப்புகள் எல்லாம் படு பாதாளத்தில் வீழ்ந்து விட்ட பிறகும் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்களிலும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன்களை அள்ளிக் கொடுப்பதிலும், அவர்கள் கட்டத் தவறும் பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்வதிலும் மட்டுமே அவசரம் காட்டினார். அவரது இல்லத்தின் முன்பே நின்று கடன் தள்ளுபடிக்காக போராடிய விவசாயிகள் பற்றியோ, நாடு முழுவதும் நெருப்பில் விழுந்த புழுக்கள் போல் துடித்துக் கொண்டிருந்த ஏழைகள் பற்றியோ துளியும் கவலைப்படவில்லை.

இந்நிலையில், ராகுல்காந்தியின் குறைந்த பட்ச ஊதிய உறுதித் திட்டம் மூலம் 25 கோடி ஏழைகள் மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 72, 000 ரூபாய் பெறுவார்கள் என்ற அறிவிப்பு பாஜகவின் பாசிச ஆட்சியில் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற ஏழைகளுக்கு ஏற்ற வரப்பிரசாதம் மட்டுமல்ல - ஒரு அட்சய பாத்திரமாக கண்ணுக்குத் தெரிகிறது.

"ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்றார் அண்ணா! அதை ஏற்கெனவே திமுக ஆட்சியில் திருமண நிதியுதவி உதவித்திட்டம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் தமிழகம் கண்டிருக்கிறது.

சமூக நலத்திட்டங்கள் மூலம் ஏழைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ஒரு நாட்டுக்குத் தேவையான முதுகெலும்பு என்று நிரூபித்துக் காட்டியவர் தமிழகத்தின் முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி. அதுபோல் இப்போது ராகுல்காந்தியால் அறிவிக்கப்பட்டுள்ள நியாய திட்டத்தால் தமிழகத்தில் மட்டுமல்ல - இந்தியாவில் உள்ள ஏழைகளின் முகத்தில் ஐந்து வருடம் கழித்து இப்போது தான் சிரிப்பைக் காண முடிகிறது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று பாஜகவினர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஏன் நிதி அயோக்கின் துணை தலைவராக இருக்கும் ராஜீவ் குமார் பாஜக பிரச்சாரகராகவே மாறி "செயல்படுத்த முடியாத திட்டம்" என்று சொல்கிறார். இது எரிச்சலின் வெளிப்பாடே தவிர துளியும் உண்மை அல்ல!

"விவசாயக் கடன் தள்ளுபடி செய்வோம்" "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தை நிறைவேற்றுவோம்" என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்பு அறிவித்த போதும் பாஜகவினர் இதே போன்று விஷமப் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திமுகவும் பங்கேற்றிருந்த நேரத்தில் 72 ஆயிரம் கோடி விவசாயக் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

ஆகவே, ஏழைகளுக்கான இந்த குறைந்த பட்ச ஊதிய உறுதித்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை திரட்டி, திமுக - காங்கிரஸ் கூட்டணியால் வெற்றிகரமாக நிறைவேற்றிக்காட்டிட முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. முதன்முறையாக இந்தியாவில் கொண்டு வரப்படும் இந்தத் திட்டத்திற்கு திமுக இதயபூர்வமான ஆதரவினைத் தெரிவித்து, ஜூன் மூன்றாம் தேதிக்குப் பிறகு ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள் என்ற நிலை திமுக - காங்கிரஸ் கூட்டணியால் உருவாகும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" என, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x