Published : 22 Mar 2019 09:06 AM
Last Updated : 22 Mar 2019 09:06 AM

‘சின்ன’க் குழப்பங்கள் எனும் தொடர்கதை!

தேர்தல் காலங்களில் கட்சி சின்னங்கள் தொடர்பாக ஏற்படும் சுவாரஸ்யக் குழப்பங்கள் எல்லா காலத்துக்கும் பொதுவானவை போலும். 1971 பொதுத் தேர்தலின்போது நிஜலிங்கப்பா தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸுக்கு ‘ராட்டை’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இந்திரா காந்தி சார்பில் தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாபு ஜகஜீவன் ராம், “இது காங்கிரஸ் கட்சியின் கொடியில் இருக்கிறது, இதை எப்படி இன்னொரு காங்கிரஸுக்குச் சின்னமாக ஒதுக்குவீர்கள்?” என்று கடுமையாக ஆட்சேபித்தார். தேர்தல் ஆணையம் ஏற்றது. ‘ராட்டை சுற்றும் பெண்’ சின்னம் ஸ்தாபன காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. முந்தைய தேர்தல்களில் உடையாத காங்கிரஸ் கட்சியின் சின்னமாக ‘இரட்டைக் காளை மாடுகள்’ இருந்தன. அந்தச் சின்னம் இருந்த வரையில் காங்கிரஸ் கட்சி தன்னிகரில்லாத அரசியல் கட்சியாக இருந்தது தனிக் கதை.

‘கை’ சின்னமும் ஆரம்பத்தில் பிற கட்சிகளால் எதிர்க்கப்பட்டது. கர்நாடகத்தில் ஒரு கோயிலில் ‘கை’தான் வழிபடும் சின்னமாம். தேர்தல் சின்னங்களை வாக்குச் சாவடிக்கு அருகே கொண்டுசென்றாலே தேர்தல் அதிகாரிகள் ஆட்சேபிப்பார்கள். இந்தக் ‘கை’யை என்ன செய்வது? ‘கை’யோடு போய் வாக்களித்துவிட்டு, ‘கை’யோடு வர வேண்டுமே.முரசு, பம்பரம், இரட்டை இலை, உதயசூரியன், அரிவாள்-சுத்தியல், கதிர் அரிவாள், தாமரை என்று ஆயிரம் சின்னங்கள் இருந்தாலும் ‘கை’ மட்டும்தான் வாக்குச் சாவடிக்குள்ளும் போகும், வரும். இதோ, சமீபத்தில் இன்னொரு செய்தி புகைப்படத்துடன் வெளியானது. ஒரு தெருவில் கைரேகை பார்த்துப் பலன் தரும் சோதிடர்களின் விளம்பரத் தட்டிகளைத் துணிபோட்டு மூடிவிட்டார்களாம்.

- சி.ஹரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x