Last Updated : 20 Mar, 2019 05:05 PM

 

Published : 20 Mar 2019 05:05 PM
Last Updated : 20 Mar 2019 05:05 PM

மாயாவதி-காங்கிரஸ் மோதலின் பின்னணியில் உள்ள வாக்கு வங்கி

முக்கிய மாநிலமான உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியால் காங்கிரஸ் குறி வைத்து தாக்கப்பட்டு வருகிறது. இந்த மோதலின் பின்னணியில் பிராமணர், முஸ்லிம் மற்றும் தலித் வாக்குகள் மறைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

உ.பி.யின் 80 தொகுதிகளில் அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதியுடன் மாயாவதி கூட்டணி அமைத்தார். தன்னுடன் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்த்தவர் காங்கிரஸை மட்டும் விலக்கி வைத்தார். எனினும், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போட்டியிடும் ரேபரேலி மற்றும் அமேதியை மட்டும் மாயாவின் கூட்டணி விட்டு வைத்தது. இங்கு தம் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை எனக் கூறியது.

இதற்கு பதிலாக காங்கிரஸ் மாயாவதி-அகிலேஷ் கூட்டணித் தலைவர்களின் ஏழு தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்றது. இரண்டு தினங்களுக்கு முன்பான இந்த அறிவிப்பையும் மாயாவதி ஏற்காமல் விமர்சித்திருந்தார்.

உ.பி.யின் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடலாம் என மாயாவதி விமர்சனம் செய்திருந்தார். இத்துடன் முன்னதாக விட்டு வைத்த அமேதி ரேபரேலியில் வேட்பாளர்களை நிறுத்தவும் வாய்ப்புள்ளதாக மிரட்டப்பட்டது. தொடர்ந்து உ.பி.க்கும், மற்ற மாநிலங்களிலும் மாயாவதி காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை. சத்தீஸ்கரில் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியவர், ம.பி. மற்றும் ராஜஸ்தானிலும் காங்கிரஸைப் புறக்கணித்தார்.

ஹரியாணாவின் சிறிய கட்சியான ராஜ்குமார் செய்னியின் எல்எஸ்பியுடன் கூட்டணி வைக்க முன்வந்தவர் காங்கிரஸை கண்டுகொள்ளவில்லை. இதேபோல், மகராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் டெல்லியிலும் காங்கிரஸுக்கு மாயாவதியால் அதேநிலை ஏற்பட்டது. இத்தனைக்கும் மாயாவதிக்கு உ.பி. தவிர மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. எனினும், அதற்கு உள்ள சில ஆயிரம் வாக்குகளையும் இழக்க விரும்பாத காங்கிரஸ் மாயாவதியுடன் கூட்டு சேரத் தயாராக இருந்தது.

ஆனால், தொடர்ந்து காங்கிரஸை வெறுக்கும் வகையில் மாயாவதியின் நடவடிக்கை இருந்தது. இதன் பின்னணியில் இரண்டு கட்சிகளுக்கும் உள்ள ஒரே வகையான வாக்குகள் காரணமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக உ.பி.யில் தலித் வாக்குகளை நம்பி இருந்த பகுஜன் சமாஜ், முஸ்லிம் மற்றும் பிராமணர் ஆதரவையும் பெற்று ஒரு முறை ஆட்சியையும் பிடித்திருந்தது. இதனால், மக்களவைத் தேர்தலிலும் அதே வாக்குகளை மாயாவதி குறி வைத்துள்ளார்.

இந்நிலையில், மாயாவதி குறி வைத்தவை காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளாக உள்ளன. இவை அவ்வப்போது மாற்றி விழுவதால் உ.பி.யில் காங்கிரஸுக்கு இறங்குமுகம் ஏற்பட்டிருந்தது. எனினும், இந்தமுறை பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வீசும் அலையை தனக்கு சாதகமாக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதற்காக தனது காந்தி குடும்பத்தின் துருப்புச்சீட்டாக இருந்த பிரியங்கா வதேராவை தீவிர அரசியலில் இறக்கி விட்டது.

கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிரியங்காவிற்கு உ.பி.யின் கிழக்கு பகுதி அளிக்கப்பட்டது. இதன் செயலில் இறங்கியவர் தலித் வாக்குகளையும் குறி வைத்தார். உ.பி.யில் தலித் செல்வாக்கை பெறத் தொடங்கியுள்ள ராவண் என்கிற சந்திரசேகர் ஆசாத்தை நேரில் சென்று சந்தித்தார் பிரியங்கா. பாஜகவில் இருந்து வந்த உ.பி.யின் பைரைஜ் தொகுதி எம்.பி.யும் பெண் துறவியுமான சாவித்ரிபாய் புலேவை காங்கிரஸில் சேர்த்தார்.

உ.பி.யின் தலித் தலைவர்களான ஆசாத் மற்றும் சாவித்ரியின் மீது காங்கிரஸின் நடவடிக்கையும் மாயாவதிக்குப் பிடிக்கவில்லை. தான் ஒதுக்கி வைத்த இந்த இரண்டு தலைவர்களையும் காங்கிரஸ் தன்பக்கம் இழுத்து வளர்க்க முயல்வதாக மாயா குற்றம் சுமத்துகிறார். இதுபோன்ற காரணங்களால் காங்கிரஸுடன் உறவு கொண்டாட மாயாவதி மறுத்து வருகிறார். இதன் தாக்கம் உ.பி.யில் மட்டும் அன்றி தேசிய அளவிலும் இருக்கும் எனக் காங்கிரஸ் அஞ்சுகிறது.

உண்மையில் மாயாவதியின் அச்சம் உ.பி.யில் மட்டுமே ஏற்புடையதாக உள்ளது. மற்ற மாநிலங்களில் மாயாவதிக்கு தலித் வாக்குகள் மட்டுமே உள்ளன.

உ.பி.யில் காங்கிரஸுடன் மாயாவதி காட்டும் வெறுப்பு பாஜகவிற்கு சாதகமாக அமையும். இதுபோல், வாக்குகள் பிளவு தான் பாஜக வெற்றியும் முக்கிய சூத்திரமாக அமைந்துள்ளது.

பாஜக பெறும் ஆதாயத்தைத் தடுக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கூட்டணிக் கட்சி தலைவர்களையும், நண்பர்களையும் உதவிக்கு அழைத்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற முக்கியத் தலைவர்களான தேசியவாத காங்கிரஸின் சரத்பவார், சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் ஆகியோர் மாயாவதியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இவர்கள் பெறும் வெற்றி மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் வாய்ப்புள்ளது. இல்லை எனில் அது பாஜக தலைமைக்கே மீண்டும் ஆட்சி அமைக்க உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x