Published : 12 Mar 2019 08:57 AM
Last Updated : 12 Mar 2019 08:57 AM

பாஜகவை பார்த்து இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டாம்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத் கருத்து

இஸ்லாமியர்களும் வாக்களித்து தான் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. பாஜகவை பார்த்து இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் ஷேக்தாவூத் தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

மக்களவைத் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?

தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதால், அந்த கூட்டணியை ஆதரிக்கிறோம்.

இந்த தேர்தலில் உங்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் தொகுதி கேட்டுள்ளீர்களா?

தொகுதி கேட்டுள்ளோம். வழங்குவதாக அதிமுக தலைமை உறுதி அளித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்.

அதிமுக - பாஜக கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மக்கள் தலைவராக இருந்தார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததால், அதிமுக எதிர்க்கட்சியாக பணியாற்றியது. மத்தியில் இணக்கமான அரசு அமைந்தாலும், தமிழகத்துக்கு தேவையான நல்ல திட்டங்களை முழுமையாக கொண்டுவர இயலவில்லை. இந்த சூழலில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், மாநில நலன் கருதி பாஜகவுன்  அதிமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது. இதை வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம்.

பாஜக ஆட்சியில் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுகின்றன. இதில் உங்கள் கருத்து என்ன? பாஜக வேட்பாளர்களை நீங்கள் ஆதரிப்பீர்களா?

பாஜகவைப் பார்த்து இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 2014 மக்களவைத் தேர்தலில், இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆக, இஸ்லாமியர்களும் வாக்களித்துதான் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது.

தவிர, காங்கிரஸ் ஆட்சியின்போது தான் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தது. காங்கிரஸ் நினைத்திருந்தால், இந்த சம்பவத்தையே தவிர்த்திருக்கலாம். அதே போல, தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்காக கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அதே சமயம், காங்கிரஸ், திமுகவுடன் சில இஸ்லாமிய கட்சிகள் கூட்டணியும் அமைத்துள்ளன. அதிமுக கூட்டணி தலைமையிலான பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவோம். அதேநேரம், பாஜக தவறு செய்தால், அதை கண்டித்தும் போராடுவோம்.

பாஜக ஆட்சியில் நீங்கள் வரவேற்கும் திட்டங்கள் என்ன?

தொலைநோக்கு திட்டமான நதிநீர் இணைப்பு, விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

ஜனநாயக நாட்டில் தேர்தல் வரைதான் தலைவர்களை கட்சி சார்ந்தவர்களாக பார்க்க வேண்டும். வெற்றி பெற்று, பிரதமராக தேர்வாகிவிட்ட பிறகு, ஒரு கட்சி சார்ந்தவராக பார்க்கக் கூடாது. மக்களுக்கு கொண்டு வந்துள்ள திட்டங்களைத்தான் பார்க்க வேண்டும்.

அயோத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண 3 பேர் கொண்ட சமரசக் குழு அமைக்கப்பட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

‘இது நிலம் சம்பந்தமான வழக்கு கிடையாது. உணர்வுபூர்வமான வழக்கு’ என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் சமரசம் காண உச்ச நீதிமன்றம் 3 பேர் குழு அமைத்திருப்பதை வரவேற்கிறோம். இதில் பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வு ஏற்பட்டு, மக்கள் மத்தியில் நிம்மதி ஏற்படும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x