Published : 15 Mar 2019 09:00 AM
Last Updated : 15 Mar 2019 09:00 AM

நட்சத்திரங்களை மீண்டும் களம் இறக்கிய மம்தா

மக்களவைத் தேர்தலில் வழக்கம் போல், திரை நட்சத்திரங்களை மீண்டும் களம் இறக்கியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்குவங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி, கடந்த செவ்வாய்க்கிழமை 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் தற்போதுள்ள 10 எம்.பி.க்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

ஆனால், வழக்கம் போல் மம்தா பானர்ஜி திரை நட்சத்திரங்களை தேர்தலில் களம் இறக்கி உள்ளார். இந்தத் தேர்தலில் 5 பேருக்கு அவர் வாய்ப்பளித்துள்ளார். அவர்களில் 2 பேர் புதியவர்கள். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் 5 நட்சத்திரங்களைக் களம் இறக்கினார். அவர்களும் அனைவருமே வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், பெங்காலி பட இளம் நடிகை மிமி சக்ரவர்த்தியை, மிகவும் முக்கியமான ஜாதவ்பூர் தொகுதியில் மம்தா நிறுத்தியிருக்கிறார். இவர் அரசியலுக்கு புதியவர், அனுபவம் இல்லாதவர். இவருக்கு ‘சீட்’ வழங்கியதால் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்தத் தொகுதியில்தான் கடந்த 1984-ம் ஆண்டு இளம் காங்கிரஸ் வேட்பாளராக மம்தா முதன்முதலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் செல்வாக்கு மிக்க மார்க்சிஸ்ட் வேட்பாளர் சோம்நாத் சாட்டர்ஜியைத் தோற்கடித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

தற்போது ஜாதவ்பூர் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சுகதா போஸ். இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். தேர்தலில் போட்டியிட அவருக்குப் பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், இளம் நடிகை மிமி சக்ரவர்த்தியை மம்தா நிறுத்தியிருக்கிறார்.

அதேபோல் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசிர்ஹத் தொகுதியில் பெங்காலி நடிகை நுஸ்ரத் ஜஹானுக்கு மம்தா ‘சீட்’ வழங்கி உள்ளார்.

இவரும் அரசியலுக்குப் புதியவர். இந்தத் தொகுதி திரிணமூல் எம்.பி. இத்ரிஸ் அலி, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று மம்தா அறிவித்துள்ளார்.

புதிய நடிகைகள் இருவர் தவிர, திரை நட்சத்திரங்களும் தற்போதைய எம்.பி.க்களுமான தீபக் அதிகாரி (தேவ் என்ற பெயரில் பிரபலமானவர்) கடால் தொகுதியிலும், சதாப்தி ராய் பிர்பும் தொகுதியிலும், மூன்மூன் சென் அசன்சோல் தொகுதியிலும் திரிணமூல் சார்பில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

கடந்த முறை பங்குரா தொகுதியில் போட்டியிட்டு மூன்மூன் சென் வெற்றி பெற்றார். அசன்சோல் தொகுதியில் பிரபல பாடகர் பபுல் சுப்ரியோ பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யானார். அந்தத் தொகுதிக்கு இப்போது மூன்மூன் சென் மாற்றப்பட்டுள்ளார். மேலும், பழம்பெரும் நடிகர்களும் தற்போதைய எம்.பி.க்களுமான தபஸ் பால், சந்தியா ராய் ஆகியோருக்கு இந்தத் தேர்தலில் மம்தா வாய்ப்பளிக்கவில்லை. இவர்களில் ரோஸ் வேலி சிட்பண்ட் மோசடியில் தபஸ் பால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். எனவே, அவருக்கு மீண்டும் ‘சீட்’ வழங்கவில்லை என்கின்றனர்.

இவர்கள் தவிர பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை, மாநிலங்களவை எம்.பி.யாக்கினார் மம்தா. ஆனால், உடல்நலனைக் காரணம் காட்டி அவர் கடந்த 2016-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழ்நாடு, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களைப் போலவே, திரை நட்சத்திரங்களை தேர்தலில் போட்டியிட வைக்கும் பழக்கத்தை மம்தா கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் இருந்து பின்பற்றி வருகிறார். மேலும், கட்சி பொதுக் கூட்டங்களிலும் மக்களைக் கவர சின்னத்திரை வெள்ளித்திரை நட்சத்திரங்களை அழைத்து பங்கேற்க செய்தார். கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணமூல் 19 தொகுதிகளையும், 2014-ம் ஆண்டு 34 தொகுதிகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x