Published : 25 Mar 2019 06:45 AM
Last Updated : 25 Mar 2019 06:45 AM

குடும்ப உறவா, கூட்டணி தர்மமா?- ஆரணி தொகுதியில் பாமகவுக்கு மீண்டும் சத்தியசோதனை

ஆரணி மக்களவைத் தொகுதியில் பாமகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக வேட்பாளர் ஏழுமலையை எதிர்த்து, அன்புமணி ராமதாஸின் மைத்துனர் விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், குடும்ப உறவைவிட கூட்டணி தர்மத்துக்காக பாமக உழைக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகஇடம்பெற்றது. அப்போது பாமகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆரணி தொகுதியில் அதிமுகவும், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸும் மோதின. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி 3.96 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முக்கூர்சுப்ரமணியன் 2.89 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் சம்பந்தியும், முன்னாள் மத்தியஅமைச்சர் அன்புமணி ராமதாஸின் மாமனாருமான எம்.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றது, கூட்டணி கட்சிகள்மத்தியில் பாமக மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் 6 தொகுதிகளிலும் பாமக தோல்வியைத் தழுவியது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக இடம்பெற்றன. இதில் அன்புமணி ராமதாஸின் மைத்துனரும், எம்.கிருஷ்ணசாமியின் மகனுமான விஷ்ணுபிரசாத் செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். 70 ஆயிரம் வாக்குகள் பெற்று அவர் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்ரமணியன் 96 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு ஆரணி ஒதுக்கப்பட்டது. இதில் 5 லட்சம் வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் வெ.ஏழுமலை வெற்றி பெற்றார். திமுகவுக்கு 2-வது இடம் கிடைத்தது. பாமக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி 3-வது இடம் பிடித்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஷ்ணுபிரசாத் 27,717 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லைஎன்று கூறி, பாமக தனித்து களம்இறங்கியது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸுக்கு செய்யாறு தொகுதி ஒதுக்கப்பட்டது. விஷ்ணுபிரசாத் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

அதிமுக வேட்பாளர் தூசி கே.மோகன் வெற்றி பெற, 8,527 வாக்குகள் வித்தியாசத்தில் 2-ம் இடம் பிடித்தார் விஷ்ணுபிரசாத். 37,491 வாக்குகளுடன் பாமக வேட்பாளர் சீனிவாசன் 3-வது இடம் பிடித்தார்.

தற்போது ஆரணி மக்களவைத் தொகுதியில் அதிமுக களம் இறங்கியுள்ளது. அதிமுக சார்பில் வெ.ஏழுமலை, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் விஷ்ணுபிரசாத் மோதுகின்றனர். இதுகுறித்து ஆரணி தொகுதி வட்டாரங்கள் கூறியதாவது:2014, 2016 தேர்தல்களில் பாமக போட்டியிடும்போது கட்சிக்காக உழைத்தார்கள். 2009 தேர்தலில் அதிமுக போட்டியிட்டபோது, பாமகவினர் உள்வேலை செய்ததாக புகார் எழுந்தது.

இப்போது, கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் போட்டியிடுகிறார். தன் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டபோது, உறவைவிட கட்சிதான் முக்கியம் என்று உழைத்ததுபோல, தற்போதும் குடும்ப உறவைப் பார்க்காமல், கூட்டணி தர்மத்துக்காக பாமக உழைத்தால், வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x