Last Updated : 20 Mar, 2019 10:37 AM

 

Published : 20 Mar 2019 10:37 AM
Last Updated : 20 Mar 2019 10:37 AM

திமுக, அதிமுக வேட்பாளர்களில் ஏன் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை?

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை என்பது பலத்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இன்றைக்குத் தமிழக அரசியல் சூழலை திராவிடக் கட்சிகளே தீர்மானிக்கின்றன என்பதால் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் அரசியல் வரலாறே சிறுபான்மையினரையும் அவர்களது உரிமைக்கான போராட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால்தான் இந்த விஷயம் கூடுதல் முக்கியத்துவம் கொண்டதாகிறது.

முன்பே தொடங்கிவிட்டது

தற்போதைய மக்களவைத் தேர்தலில்தான் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்தப் பிரச்சினையைச் சுருக்கிவிடவும் முடியாது. கடந்த தேர்தலிலேயே அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் தங்களது கட்சியின் சார்பாக ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரைத்தான் நிறுத்தியிருந்தன. அதுவும் ஒரே தொகுதியில். ராமநாதபுரம் முஸ்லிம் வாக்குவங்கி அதிகம் உள்ள தொகுதி என்பதால் இருக்கலாம். திமுக முகமது ஜலீலை  நிறுத்தியது. அதிமுகவைச் சேர்ந்த அன்வர்ராஜா போட்டியிட்டு வெற்றிபெற்றார். முத்தலாக் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் வாய்ப்பை அவர் பெற்றதையும் இங்கு இணைத்துத்தான் பார்க்க வேண்டும்.

சிறுபான்மையினர் ஒரு அரசியல் கட்சியோடு இணைந்து பணியாற்றும்போது அந்தக் கட்சியின் கொள்கைகளை மட்டுமல்ல, தான் சார்ந்த சிறுபான்மை இனத்தின் குரல்களையும் சேர்த்தே எதிரொலிக்கிறார்கள்.  தமிழகத்தைப் பொறுத்தவரை, முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தனிக்கட்சிகளை ஆரம்பித்துப் பிரதான கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். கூட்டணியின் பலத்தோடு தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுவதை விரும்புகிறார்கள்.  அதேநேரத்தில், பிரதானக் கட்சிகளிலும் தங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் போதிய இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக், வேலூர் தொகுதியில் எம்.ரகுமானை நிறுத்தியது. மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட இடத்தில் மயிலாடுதுறை தொகுதியில் செ.ஹைதர் அலி போட்டியிட்டார். நடக்கவிருக்கும் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம்

‘‘முஸ்லிம்களுக்குக் கட்சிக்குள் பிரதிநிதித்துவம், கூட்டணியிலும் வாய்ப்பு என்று இரண்டு வகைகளிலும் எப்படி இடங்களை ஒதுக்க முடியும்,  அது மற்ற சமூகங்களுக்கு இடங்கள் ஒதுக்குவதைப் பாதிக்குமே என்பதுதான் பிரதானக் கட்சிகளின் பிரச்சினையாக இருக்கிறது’’ என்று சொல்லப்படுகிறது.  சிறுபான்மையினராக இருக்கும் எந்தவொரு சமூகத்துக்கும் பொதுவான பிரச்சினைதான் இது. ஆனால், இந்த இரண்டு வாய்ப்புகளையுமே அவர்கள் பெறுவதற்கான நியாயமும் இருக்கிறது. சிறுபான்மையினர் தங்களுக்கான அரசியலைப் பேசுவதற்கான தனியமைப்புகளும் வேண்டும். அதேநேரத்தில், அவர்கள் தனித்து ஒதுங்கிவிடாமல் அரசியல் பொது நீரோட்டத்திலும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்னமும் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள்தொகைக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மைநிலை. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 14.2% முஸ்லிம்கள் இருக்கிறார்கள். மக்கள் தொகையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 70 இடங்களாவது இருக்க வேண்டும்.  ஆனால், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 22 பேர் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற்றார்கள். மக்களவையின் மொத்த உறுப்பினர்களோடு ஒப்பிடும்போது அவர்களின் எண்ணிக்கை என்பது வெறும் 4.24%  மட்டுமே.

1980-களில் இது 9% ஆக இருந்தது.

‘வழிவகுத்த’ பாஜக

1952 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்திய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போதுதான். அதற்கு அப்போது இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்ட பாஜக ஆதரவு அலைக்கும் ஒரு முக்கியப் பங்கிருக்கிறது. பாஜக 1980-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட தேர்தல்களில் மொத்தமே 20 முஸ்லிம் வேட்பாளர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறது.  இவர்களில் மூன்று பேர் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக 428 பேர் போட்டியிட்டார்கள். அவர்களில் ஏழு பேர் மட்டுமே முஸ்லிம்கள். யாருமே வெற்றிபெறவில்லை. இந்திய அரசியல் வரலாற்றிலேயே, மக்களவையில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த கட்சியில் ஒருவர்கூட முஸ்லிம் உறுப்பினர் இல்லை என்ற நிலை 2014-ல்தான் ஏற்பட்டது. அதன் பின்தொடர்ச்சியாகவே தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலையும் போட்டியிடுபவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.  ஒரு கட்சி, சிறுபான்மையினருக்கு எதிராகப் பெரும்பான்மையினரைத் திரட்டும்போது அந்தக் கட்சி மட்டுமல்ல, அதை எதிர்த்துப் போட்டியிடும் கட்சிகளும்கூடச் சிறுபான்மையினர்களை விலக்கிவைக்கின்றனவோ எனும் சந்தேகமும் எழுகிறது. அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி, வெற்றிக்கான வியூகமே முதன்மை பெறுகிறது.

அணுகுமுறை மாறட்டும்

இந்த நடைமுறைப் பிரச்சினைகளால் முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், தனது கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் மூன்று இடங்களைச் சிறுபான்மையினருக்கு ஒதுக்க வேண்டும், அதில் ஒன்று கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். கிறிஸ்தவர்கள் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய தொகுதிகளில்கூட அவர்கள் போட்டியிட முடியாத நிலையைத்தான் அக்கடிதம் சுட்டிக்காட்டுகிறது.

பிரதானக் கட்சிகளின் அங்கத்தினர்களாக இருந்து அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எப்படி சிறுபான்மையினரின் பிரதிநிதிகளாக ஏற்க முடியும், அவர்கள் கட்சியின் பிரதிநிதிகள்தானே என்ற விவாதங்களும்கூட இதையொட்டி எழுகின்றன. ஆனால், ஒரு கட்சி சிறுபான்மையினரையும் உள்ளடக்கி அவர்களையும் அரவணைத்துச் செல்லும்போது அவர்களது நலனுக்கும் உரிமைகளுக்கும் எதிரான முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுத்துவிடாது, மறுபரிசீலனை செய்யும். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதாலேயே கட்சி வேட்பாளர்களில் சிறுபான்மையினரும் இடம்பெற வேண்டும் என்ற குரல் எழுகிறது.

சிறுபான்மையினர் தங்களுக்கான தனியமைப்புகளை உருவாக்கிக்கொள்ளட்டும். அதேசமயத்தில், அவர்களைப் பிரதான கட்சிகள் தங்களோடு தக்கவைத்துக்கொள்ளவும் வேண்டும். இது தேர்தல்சார்ந்த அணுகுமுறை மட்டுமல்ல. அதுவே ஜனநாயகத்தின் நோக்கமும்கூட.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x