Published : 11 Mar 2019 03:19 PM
Last Updated : 11 Mar 2019 03:19 PM

17 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 13-ம் தேதி விருப்ப மனு அளிக்கலாம்: அதிமுக தலைமை அறிவிப்பு

17 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 13-ம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதன்படி, தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

மக்களவை பொதுத்தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதியே நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் 17 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 13-ம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ''ஏப்ரல் 18-ம் தேதி 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதிமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 13-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரத்தை அதிமுக தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

13-ம் தேதி மாலையே (புதன்கிழமை) விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும். திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கெனவே விருப்ப மனு பெறப்பட்டுள்ளதால் அதற்கு விருப்ப மனு அளிக்கத் தேவையில்லை'' என்று தெரிவித்துள்ளனர்.

கருணாநிதியின் தலைமைப் பண்பில் ஸ்டாலினை பொருத்திப் பார்க்க முடியுமா? - தொல்.திருமாவளவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x