Published : 22 Feb 2019 10:00 AM
Last Updated : 22 Feb 2019 10:00 AM

மக்களவைத் தேர்தல் கூட்டணிக் கணக்குகள் சொல்வது என்ன?

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தங்கள் தொகுதி உடன்பாட்டுக் கணக்குகளை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கின்றன. அதிமுகவுடனான கூட்டணியில் ஐந்து இடங்களைப் பெற்றிருக்கிறது பாஜக. எதிர்பார்க்கப்பட்டதைவிட இது குறைவான எண்ணிக்கைதான். இதுவரை அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்துவந்த பாமகவுக்கு ஏழு இடங்கள் கிடைத்திருக்கின்றன. மறுபுறம், திமுக கூட்டணியில் கடும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 10 இடங்களைப் பெற்றிருக்கிறது காங்கிரஸ்.

1996 முதல் 2004 வரையிலான நான்கு மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் அல்லது பாஜக என்று மாறி மாறிக் கூட்டணி வைத்துக்கொண்ட அதிமுக, 2009, 2014 தேர்தல்களில் தனித்தே களம் கண்டது. 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் உருவான அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர் அதிமுக அதே நிலைப்பாட்டில் இருக்க முடியாதுதான். இந்த முறை பாஜகவுக்கு ஐந்து இடங்களையும் பாமகவுக்கு ஏழு இடங்களையும் தரும் நிலைக்கு அதிமுக வந்திருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதில் அக்கட்சி காட்டும் அக்கறையே இதற்கு முக்கியக் காரணம் எனலாம்.

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக தரும் அழுத்தம் ஒருபுறம், கிட்டத்தட்ட பெரும்பான்மை பலத்தை இழந்து நிற்கும் நிலை மறுபுறம் என்று அதிமுகவுக்கு இது சவாலான சூழல். மக்களவைத் தேர்தலுடன் 21 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இடைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பதுதான் முதல்வர் பழனிசாமியைப் பொறுத்துவரை முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். அதேசமயம், பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதை மத்திய அரசில் பங்கெடுத்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் பார்க்கிறது அதிமுக. வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டுவந்ததுதான் அதிமுகவைப் பொறுத்தவரை இன்னும் சாதகமான விஷயம் எனலாம். இடைத்தேர்தல்களிலும் பாமகவுடனான கூட்டணிக் கணக்கு கணிசமான அளவில் கைகொடுக்கும் என்பது அதிமுகவின் எண்ணம்.

இந்தியாவின் கூட்டணி ஆட்சிகளில், திமுக முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. பல்வேறு கட்சிகளுடனான கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்திருக்கிறது. ஒருவேளை அதிமுக ஆட்சி தனது பதவிக்காலமான 2021 வரை நீடிக்கும்பட்சத்தில், அடுத்து அமையவிருக்கும் மத்திய அரசில் அங்கம் வகிப்பது என்பது திமுகவைப் பொறுத்தவரை மிக முக்கியமானது.

கடந்த இரண்டு சட்ட மன்றத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்திருக்கும் திமுக, மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தோல்வியைச் சந்தித்தால் அது அக்கட்சிக்குப் பின்னடைவாக இருக்கும். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின், இந்தத் தேர்தல் தனது செல்வாக்கை நிரூபிப்பதற்கான மிகப் பெரிய வாய்ப்பு என்றே கருதுகிறார். இரு தரப்பிலும், பிற கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேரம் இன்னமும் இறுதிவடிவம் பெறவில்லை. கூட்டணி இறுதிசெய்யப்பட்ட பின்னர் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்று நம்பலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x