Published : 23 Feb 2019 03:06 PM
Last Updated : 23 Feb 2019 03:06 PM

சனிக்கிழமை பிரதமர் என கேலி செய்த அமித் ஷா: நன்றி தெரிவித்த ஸ்டாலின்

மீண்டும் பிரதமராக மோடி வரமாட்டார் என்பதை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஒப்புக்கொண்டதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஓசூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தொரப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்திலும், அதன்பின்னர் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.

ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

''திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைகின்ற போது நிச்சயமாக மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

திமுக ஆட்சியில் இல்லாவிட்டால் கூட, நமக்கும் அவர்களுக்கு ஓட்டு வித்தியாசம் 1.1 சதவீதம் தான். 1 சதவீதம் கூட வாங்கியிருந்தால் இன்றைக்கு நாம் ஆட்சியில் இருந்திருப்போம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு ஆட்சியில் இருக்கின்றார் என்றால் அதற்குக் காரணம் ஜெயலலிதா காலில் விழுந்தது மட்டுமல்ல, சசிகலா காலில் விழுந்து அல்ல தவழ்ந்து முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

நேற்றைக்கு பாஜக தலைவர் அமித் ஷா மதுரையில், பாஜகவுக்கு எதிராக அமைந்துள்ள நம்முடைய கூட்டணி கட்சித் தலைவர்களையெல்லாம் பார்த்துக் கிண்டல் செய்து கேலி செய்து பேசியிருக்கின்றார். யார் பிரதமர் என்று கூட சொல்ல முடியவில்லை. எதிரில் அமைந்திருக்கக்கூடிய கூட்டணிக்கு யார் தலைவர் என்று கூட சொல்ல முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொருவர் பெயரைச் சொல்லி அவர்கள் தான் முதல்வர் என்றும், சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் பிரதமர் என்றும் சொல்லியிருக்கின்றார். என் பெயரை ஞாபகமாக வைத்து சொன்னதற்கு அமித் ஷாவுக்கு நன்றி. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு விடுமுறையாம் ஏனென்றால் அன்றைக்கு பிரதமர் கிடையாதாம்.

இப்பொழுது இந்தியாவில் பிரதமருக்கு நிரந்தரமாக விடுமுறை. ஏனென்றால், பிரதமர் நாட்டில் கிடையாது. அவர் வெளிநாட்டில் சுற்றிக் கொண்டிருக்கின்றார். இது அமித் ஷாவுக்குத் தெரியவில்லை, மோடி வரமாட்டார் என்பதை அமித் ஷா ஒப்புக்கொண்டார். நாங்கள் தான் பிரதமர்களாக வரப்போகின்றோம் என்று அவரே வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டார். அவருடைய தோல்வி அவருக்கே வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருக்கின்றது".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x