Published : 20 Apr 2014 09:58 AM
Last Updated : 20 Apr 2014 09:58 AM

90 வயதில் முதுகுவலியோடு சாலை வழியே பிரச்சாரம் செய்கிறேன்: தொண்டர்களுக்கு கருணாநிதி உருக்கமான கடிதம்

கடும் முதுகுவலியுடன் 90 வயதில் சாலை வழியாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு சனிக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா 40 இடங்களிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி தோழமைக் கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கொடுக்காமல் அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்டு ஹெலிகாப்டரில் சென்று சிரமம் இல்லாமல் வாக்கு கேட்டு வருகிறார்.

நானோ இந்த 90 வயதில், பயணம் செய்ய வசதியற்ற ஒரு வேனில் தூக்கிக் தூக்கிப் போடுகின்ற நிலையில் சாலை வழியாக பல நூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து மக்களைச் சந்திக்கிறேன். வேன் ஒவ்வொரு பள்ளத்திலும் விழும்போது, முதுகு வலியால் அவஸ்தைப்படுகிறேன்.

ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் பேசிவிட்டு தங்குமிடத்துக்குச் செல்லும்போது உடம்பு முழுவதும் வலி. இரவு முழுவதும் தூக்கமில்லை. நான் எந்த அளவுக்கு சிரமப்படுகிறேன் என்பதை என்னுடன் பயணம் செய்த 2 மருத்துவர்களிடம் கேட்டால் கூறுவார்கள். என்னால் முடிந்தவரை உழைக்கிறேன். முடிவினை நல்ல விதமாக நீ எடுப்பாய் என்பதை நன்கறிவேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும், கேள்வி-பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில், சாட்சிகள் கூறிய விவரங்களை எந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் கூறவில்லையே?

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவும், அவருக்கு நெருக்கமானவர்களும் தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்திருப்பதையும் அதன் தற்போதைய மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என்பதையும் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரால் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

ஆனால், அந்த உண்மைகள் உலகுக்கு தெரியாதவை. தாங்கள் ஏதோ புனிதவதிகள் என்பதைப் போல தேர்தல் பிரச்சார கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா பேசி வருகிறார். இந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அனைத்து சொத்துக்களும் யாருடைய பெயரில் வாங்கப்பட்டுள்ளன என்ற கேள்வி ஒருசிலருக்கு எழுந்துள்ளது.

சொத்துக்களை வாங்கிக் குறிப்பதற்காகவே ஜெயலலிதா தரபினர் 1993-1994-ம் ஆண்டுகளில் பல கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த கம்பெனிகளின் பெயரில் வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த பணத்தின் மூலம் அந்த கம்பெனிகளின் பெயரில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஜெயலலி தாவின் ஆடிட்டர் கோபால்ரத்னம், தமிழக காவல்துறை வீடியோ கிராபர், சென்னையைச் சேர்ந்த தாஜூதீன், ராஜகோபாலன், வெங்கட்ராமன், சிவசங்கர், சாமிநாதன், சிட்கோ நிறுவன மேலாளர் கோவிந்தராஜன், வீட்டுவசதி வாரியத்தைச் சேர்ந்த கீதாலட்சுமி, இந்தியன் வங்கி மேலாளர் பவானி, பதிவுத்துறை ஐ.ஜி. ராஜகோபால் உள்பட ஏராளமானோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த சாட்சியங்களை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடி விசாரணையை தேர்தலுக்குப் பிறகு நடத்துவதற்கு ஒப்புதல் பெற்றிருக்கிறார்கள். இப்படி எத்தனை நாளைக்குத்தான் வாய்தா வாங்கியே காலத்தை தள்ளப்போகிறார்களோ?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x