Published : 06 May 2014 00:00 am

Updated : 06 May 2014 11:09 am

 

Published : 06 May 2014 12:00 AM
Last Updated : 06 May 2014 11:09 AM

இந்தக் கரசேவை இந்தியாவுக்குத் தேவை!

இந்தியாவின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இந்தியாவிடமே இருக்கின்றன. இதை இந்தப் பயணத்தின்போது மேலும் ஆழமாக உணர்ந்தேன். நாட்டின் தலையாய பிரச்சினை தண்ணீர்தான். காஷ்மீரில் தொடங்கி தமிழகம் வரை நாடு முழுவதுமே தண்ணீர் பிரச்சினை பெரிய சவாலாக உருவெடுத்துவருகிறது. நீர்நிலைகள் படுகொலை நம் கண் முன்னே நடக்கிறது. ஆனால், அவற்றை எப்படிப் பாதுகாப்பது அல்லது மீட்டெடுப்பது? சில நம்பிக்கையூட்டும் முன்மாதிரிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒரு கிராமத்து உதாரணம்


அண்ணா ஹசாரேவைப் புறக்கணித்துவிட்டு இந்த அத்தி யாயத்தை எழுத முடியாது. இன்றைக்கும் நீர் மேலாண்மையில் தவிர்க்க முடியாத முன்னுதாரணம் ராலேகான் சித்தி. மகாராஷ்டிரத்தின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமம் ஒருகாலத்தில் வறட்சிக்கும் வறுமைக்கும் பேர்போனது. சுமார் 1,700 ஏக்கர் சாகுபடி நிலத்தில் 125 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே முன்பு சாகுபடி நடந்திருக்கிறது. இன்றைக்கு 1,500 ஏக்கர் பரப்பளவில் இருபோக சாகுபடி நடக்கிறது. வயல்கள் மட்டுமல்லாமல் நிலமெங்கும் பசுமை போர்த்திக்கிடக்கிறது. காரணம், அண்ணா ஹசாரே முன்னெடுத்த நீர் மேலாண்மை. குளங்களே இல்லாத ஊரில், கிராமத்து மக்களாகச் சேர்ந்து 48 குளங்களை வெட்டி

யிருக்கிறார்கள். 16 வழிந்தோடும் கால்வாய்கள், 5 தடுப்பணைகளை உருவாக்கியிருக்கிறார்கள். வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் மரங்களை நட்டிருக்கிறார்கள். “இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் நதிநீர் ஆதாரம் கிடையாது. ஆனால், மழை எல்லோருக்கும் கிடைக்கிறது. எல்லோரும் வீணாக்கும் மழைநீரைத்தான் நாங்கள் ஆதாரமாக்கியிருக்கிறோம்” என்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு எவ்வளவு மகத்தான திட்டம் என்பதை உரக்கச் சொல்கிறது ராலேகான் சித்தி.

ஓர் ஆன்மிக உதாரணம்

நாட்டிலேயே நீர் வளம் மிகுந்த மாநிலம் பஞ்சாப். நாட்டின் உணவுக் கூடையான பஞ்சாபும் நதிகள் நஞ்சாவதை இப்போது பெரும் சங்கடமாக உணரத் தொடங்கியிருக்கிறது. ஆனால், பஞ்சாபிகள் சூழலை மாற்றக் களம் இறங்கிவிட்டார்கள். முதல் களம்... காலி பெய்ன் ஆறு.

சுமார் 160 கி.மீ. நீளமுள்ள இந்தச் சிற்றாறு பஞ்சாபிகளுக்கு எந்த நதியைவிடவும் மிகவும் முக்கியமானது. குருநானக் ஞானம் பெற்ற நதி இது. காலச் சூழலில், சாக்கடைபோல் ஆகிவிட்ட காலி பெய்னை மீட்டெடுக்கச் சில ஆண்டுகளுக்கு முன் சீக்கிய குருவான பாபா பல்பீர் சிங் சீச்சேவால் களம் இறங்கினார். வீடுகள்தோறும் கரசேவைக்கும் (தன்னார்வலர்கள் சேவை) தஸ்வந்துக்கும் (வருமானத்தில் 10% நன்கொடை) கோரிக்கை விடுத்த அவரோடு கரம்கோத்த மக்கள் சில ஆண்டுகளில் காலி பெய்னை அற்புதமாக மாற்றியிருக்கிறார்கள். நதி தூர்வாரப்பட்டு, கழிவுகள் உள்ளே நுழைவது தடுக்கப்பட்டு, இருபுறங்களிலும் கான்கிரீட் கரை கட்டப்பட்டு, ஆங்காங்கே கரையோரத்தில் வழிபாட்டுத்தலங்களும் கட்டப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளிலிருந்தோ, குடியிருப்புகளிலிருந்தோ கழிவுநீர் உள்புகாதபடி மக்கள் வலுவாக எதிர்த்து நிற்கிறார்கள். “நம் நாட்டின் ஒவ்வொரு நதியும் ஆன்மிகரீதியில் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளது. அந்தப் பிணைப்பை நாம் ஞாபகப்படுத்திக்கொண்டாலே போதும்; நதிகள் தம் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்” என்கிறார்கள். பாபா அடுத்து புத்தாநள்ளாவை மீட்டெடுக்க கரசேவகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். லூதியானா தொழிற்சாலைக் கழிவுகளால் நஞ்சாறாகிவிட்ட காட்டாறு இது. கரசேவகர்கள் கரம்கோக்கிறார்கள்.

நாட்டின் பெரிய நதிகளில் ஒன்றான கங்கையை மீட்டெடுக்கவும் இதேபோல ஏராளமான அமைப்புகள் கைகோத்திருக்கின்றன. ஆனால், இது யானைப் பசிக்குச் சோளப்பொரி கதைதான். ஏனென்றால், இந்தியா, வங்கதேசம் இரு நாடுகளிலும் பாயும் கங்கையின் நீளம் 2,525 கிலோ மீட்டர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, உலகின் மாசுபட்ட நதிகளில் கங்கை ஐந்தாவது இடத்தில் இருப்பதாகச் சொல்கிறது. அவ்வளவு மோசமாக நஞ்சாக்கப்படுகிறது கங்கை. ஆனால், கங்கை உச்சபட்சமாக மதிக்கப்படும் வாரணாசியிலேயே அதன் மோசமான நிலையை மாற்ற யாரிடம் எந்தத் திட்டமும் இல்லை.

ஓர் அரசாங்க உதாரணம்

குஜராத் அரசுத் திட்டங்களில் என்னைக் கவர்ந்த மூன்றில் இரண்டு நதிநீர் மேலாண்மை தொடர்பானவை. 1. சபர்மதி நதிமுக வளர்ச்சித் திட்டம். 2. நர்மதை கால்வாய்த் திட்டம்.

அகமதாபாத் செல்லும் எவரையும் வசீகரிக்கும் சபர்மதியின் தூய்மையான தோற்றம். சபர்மதி ஆற்றைத் தூய்மைப்படுத்தி, கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் இரு கரைகளையும் கான்கிரீட் கட்டுமானங்களால் வலுப்படுத்தி, கரைகளையொட்டி நடைபாதைகளைப் போல மக்கள் பொழுதுபோக்குவதற்கேற்ற களங்கள் அமைத்து, நதிக்கரையை மக்களின் அன்றாட வாழ்வோடு பிணைக்கும் திட்டம் இது. 1960-களில் யோசிக்கப்பட்டு, 1997-ல் அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகத்தால் இதற்கெனத் தனி அமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில், 2004-ல் மோடி அரசு திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியது. படிப்படியாக நிறைவேற்றிச் செல்கிறார்கள். தெளிந்த நீரோடையாக நதி பாய, மக்கள் மாலைப் பொழுதுகளில் குடும்பத்தோடு கரையோரத்தில் கூடிக்கழிக்கிறார்கள்.

நர்மதை கால்வாய்த் திட்டம் குஜராத் அரசின் இன்னோர் அருமையான திட்டம். காலமெல்லாம் வறண்ட நிலமாக இருந்த பகுதிகளுக்கு நர்மதையிலிருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டுசென்றிருக்கிறார்கள். குஜராத் 460 கி.மீ. நீளத்துக்கும் ராஜஸ்தான் 74 கி.மீ. நீளத்துக்கும் இத்திட்டத்தால் பயன் அடைகின்றன (குஜராத் அரசு இதோடு சூரிய மின்சார உற்பத்தித் திட்டத்தையும் செயல்படுத்துகிறது என்றாலும், அது ஒரு மோசடித் திட்டம் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்). நர்மதை கால்வாய்த் திட்டத்தால், இதுவரை வெறும் முள்மரங்கள் மட்டும் நின்ற தரிசுகள் இப்போது வயல்களாக மாறியிருக்கின்றன. ஆயிரக் கணக்கான விவசாயிகள் புன்முறுவல் பூக்கின்றனர்.

பொதுவாக, இங்கெல்லாம் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள் சொல்லும் ஒரே விஷயம் இதுதான். “நீராதாரங்களை வலுப்படுத்தும் கடமை ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. நதிகள் கடக்கும் ஊர்களில் இருப்பவர்கள் முதலில் நதிகளைக் கவனியுங்கள். நதிகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் ஏரி – குளங்களைக் கவனியுங்கள். அவையும் இல்லை என்றால், உருவாக்குங்கள். முதலில் உங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பைத் தொடங்குங்கள்!”​

சமஸ்- தொடர்புக்கு: samas@kslmedia.inஅண்ணா ஹசாரேஅரசாங்கம்ராஜஸ்தான்தண்ணீர் பிரச்சனைதண்ணீர் தட்டுப்பாடு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x