கருத்துக் கணிப்புகளில் பயமுறுத்தலே தெரிகிறது: ஸ்டாலின்

கருத்துக் கணிப்புகளில் பயமுறுத்தலே தெரிகிறது: ஸ்டாலின்
Updated on
1 min read

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் அச்சுறுத்தலும், பயமுறுத்தலுமே தெரிகிறது என்றும், வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கரூர் மாவட்டம் நன்னியூரில் இன்று கரூர் வட்ட திமுக முன்னாள் செயலர் என்.கே.காந்தியின் படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில், என்.கே.காந்தியின் படத்தைத் திறந்து வைத்து பேசிய மு.க.ஸ்டாலின், "இன்றைக்கு கருத்துக் கணிப்புகளை யார் யாரோ வெளியிட்டு வருகின்றனர். இதில் அச்சுறுத்தலும், பயமுறுத்தலுமே தெரிகிறது. நாம்தான் வெற்றி பெறப்போகிறோம் என தெரிந்துகொண்டு நம்மை சோர்வடையச் செய்வதற்காக இதனை செய்துள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு விஷயங்களை அரங்கேற்றியது போல, வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதும் அத்தகைய செயல்களை அரங்கேற்ற கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். திமுக தொண்டர்கள் இதற்காக அஞ்சி, நடுங்கி மூலையில் முடங்கிப் போய்விடமாட்டார்கள்" என்றார் ஸ்டாலின்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தற்போது வெளியாகி உள்ளவை தேர்தல் கருத்துக் கணிப்புகள் அல்ல கருத்துத் திணிப்புகள் தான்" என்றார்.

முந்தைய கருத்துக் கணிப்புகளில் திமுக வெற்றி பெறும் எனக் கூறியபோது நீங்கள் இதுபோல கூறவில்லையே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உங்கள் எதிர்பார்ப்புகளை மீறி திமுக அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி" என்றார் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, தமிழகத்தில் அதிமுக 22 - 28 இடங்களையும், திமுக 7-11 இடங்களையும், பாஜக கூட்டணி 4-6 இடங்களையும் கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in