Published : 16 May 2014 07:08 AM
Last Updated : 16 May 2014 07:08 AM

வாக்கு எண்ணிக்கை நடப்பது எப்படி?: தமிழகத்தில் 42 மையங்கள் தயார்

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, 42 இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதல் சுற்று முடிவுகள் 10 மணி வாக்கில் வெளியாகும்.

மூன்று அடுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் 42 இடங்களில் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்துக்கும் 373 முதல் 420 போலீஸார் வீதம் மொத்தம் 13 ஆயிரத்து 626 மத்திய, மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் உள் அடுக்கில், மத்திய பாதுகாப்புப் படையினர் காவல் பணியில் ஈடுபடுவர். இரண்டாவது அடுக்கில், தமிழக சிறப்புப் படை போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். ஒரு மையத்துக்கு ஒரு கம்பெனி வீதம் அவர்கள் காவல் பணியில் ஈடுபடுவார்கள். மூன்றாவது வெளி அடுக்கில் மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

62 மத்திய பார்வையாளர்கள்

வாக்கு எண்ணும் பணிகளை கண் காணிப்பதற்காக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் தேவைக் கேற்ப ஒருவர் முதல் மூவர் வீதம் மொத்தம் 62 மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மையத்தில் வாக்கு எண்ணும் அறை களுக்கு இடையே அதிக இடை வெளி இருந்தாலோ, ஒரு அறை மிகப் பெரிதாக இருந்தாலோ கூடுதலாக பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தஞ்சாவூர், தென் சென்னை மற்றும் வடசென்னை நாடாளு மன்ற தொகுதிகளுக்கு கூடுதல் பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர் ஏஜென்ட்கள்

வேட்பாளர்களின் வாக்கு எண்ணும் ஏஜென்ட்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது. அவர்கள் பேனா, பேப்பர், கால்குலேட்டர், வாக்கு எண்ணிக்கைக்காக தரப்பட்டுள்ள 17சி படிவங்கள் ஆகியவற்றை மட்டும் கொண்டு வரலாம்.

வீடியோ பதிவு-செல்போன்கள்

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். செல் போன், ஐ-பேட், லேப்டாப் உள் ளிட்ட ஒலி மற்றும் ஒளிப்பதிவு வசதி கொண்ட எந்த மின்னணு கருவியும் அனுமதிக்கப்படாது. மத்திய பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டும் செல்போன்களை ஒலி எழுப்பாத வகையில் வைத்து எடுத்துச் செல்லலாம். காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அரை மணி நேரத்துக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேசையிலும் ஒரு நுண் பார்வையாளர் (மத்திய அரசு ஊழியர்), வாக்கு எண்ணும் கண்காணிப்பாளர் மற்றும் உதவி யாளர் ஆகிய 3 பேர் இருப்பார்கள்.

வெப்-கேமரா மூலம் நேரடியாக உயர் அதிகாரிகள், வாக்கு எண்ணிக் கையைக் கண்காணித்துக் கொண்டிருப் பார்கள். பொது மக்களும், வாக்கு எண்ணிக்கையை பார்வையிட ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.

காலை 10 மணிக்கு..

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் மேசை வாரியாக அறிவிக்கப்படும். பலமுறை சரிபார்த்து, தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்று வெளியிட வேண்டும் என்பதால் 20 நிமிடத்துக்கு மேல் ஆகலாம். அதனால் தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள் சற்று தாமதமாகக் கூடும். முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்குத் தெரியவரும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஒவ்வொரு மேசைக்கும் ஒரு நகல் வீதம் அனைத்து மேசைகளுக்கும் நகல் அளிக்கப்படும்.

ஒவ்வொரு சுற்று முடிவிலும், சட்டப்பேரவை தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்கள் அறிவிப்புப் பலகையில் எழுதிவைக்கப்படும். வேட்பாளருக்கும் அவரது ஏஜெண்டுக்கும் தலா ஒரு நகல் அளிக்கப்படும். தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் முன், தேர்தல் நடத்தும் அலுவலர், மத்திய பார்வையாளரின் அனுமதியைப் பெறவேண்டும்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற வேட்பாளருடன் 4 பேர் மட்டும் செல்லவேண்டும்.

இணையத்தில் முடிவுகள்

தேர்தல் துறையின் இணையதளத் தில் (www.tn.gov.in) ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை விவரம் வெளியிடப்படும். தென்சென்னை மற்றும் வடசென்னை போன்ற பெரிய தொகுதிகளில் 22 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடும். வாக்கு எண்ணும் நாளன்று டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும்.

மின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் பதிவாகும் வாக்குகள், 6 மாதம் வரை அப்படியே வைக்கப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கை முடிந்த 45 நாட் களுக்குள் தேர்தல் பிரச்சினை தொடர் பான வழக்குகளைத் தொடரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x