

திமுகவில் சில மாற்றங்களை செய்யாவிட்டால் கருணாநிதிக்கு தொடர்ந்து ஏமாற்றங்களே ஏற்படும் என லதிமுக நிறுவனத் தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் திமுக ஏற்கெனவே எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
ஒத்த கருத்து உள்ளவர்களை அரவணைத்துப் போகாத அணுகுமுறைக்கு கருணாநிதிக்கு கடவுள் கொடுத்த கடைசி எச்சரிக்கையே இது. இனிமேலாவது கருணாநிதி கட்சிக்குள் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து ஏமாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்" என்றார்.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கும், தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கும் டி.ராஜேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக பெற்ற வெற்றி தன்னம்பிக்கையோடு போராடிய தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.