

திங்கள் கிழமை மாலை வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறி இருக்கிறது. இதன் காரணமாக செவ்வாய்க் கிழமையும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகத்தைத் தொடங்கின.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் கணிசமாக ஏற்றம் பெற்றன. கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் இந்திய பங்குச்சந்தைகள் 7 சதவீத அளவுக்கு உயர்ந்தன. இந்த வருடத்தில் மட்டும் 13 சதவீதம் இந்திய சந்தைகள் உயர்ந்திருக்கின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 24000 புள்ளிகளுக்கு மேலே வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையே 24068 புள்ளிகள் வரை சென்ற சென்செக்ஸ், வர்த்தகத்தின் முடிவில் 320 புள்ளிகள் உயர்ந்து, 23871 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தகத்தின் இடையே 158 புள்ளிகள் உயர்ந்து 7172 புள்ளிகள் வரை சென்றது. ஆனால் வர்த்தகத்தின் இறுதியில் 94.50 புள்ளிகள் உயர்ந்து 7108 புள்ளியில் முடிவடைந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த மூன்று வர்த்தக தினங்களில் 3,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறார்கள்.
முதலீடு அதிகரிப்பதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வர்த்தகத்தின் முடிவில் 39 காசுகள் உயர்ந்து 59.66 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
மிட்கேப் குறியீடு 1.4 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.7 சதவீதமும் உயர்ந்தன. சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சில பங்குகளில் தினமும் 52 வார உச்சபட்ச விலையை தொடுகின்றன. தற்போதைய நிலைமையில் சுமார் 200 பங்குகள் தன்னுடைய 52 வார அதிகபட்ச விலையில் வர்த்தகமானது.
சர்வதேச சந்தைகளில் பெரும்பாலும் உயர்ந்தே காணப்பட்டன. நிக்கி 1.91 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது. அதேபோல ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றத்துடனே வர்த்தகத்தை தொடங்கின. ஆறு வருட உச்சத்தை தொட்டன.
ஹெல்த்கேர் குறியீடு சிறிதளவு சரிந்தது. மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. கேப்பிடல் குட்ஸ் குறீயிடு 2.51 சதவீதமும், மின்குறியீடு 3.26 சதவீதமும், ஆயில் அண்ட் கேஸ் குறியீடு 2.84 சதவீதமும் உயர்ந்தன.
பி.ஹெச்.இ.எல். (10.45%), ஹீரோ மோட்டொ கார்ப் (6.01%), அம்புஜா சிமென்ட்ஸ் (4.75%) ஆகிய பங்குகள் ஏற்றமடைந்தன.
பஞ்சாப் நேஷனல் வங்கி (-4.69%), டாக்டர் ரெட்டீஸ் (-4.22%), கெய்ர்ன் இந்தியா (-1.21%) ஆகிய பங்குகள் சரிந்தன.