Published : 17 Apr 2014 12:00 AM
Last Updated : 17 Apr 2014 12:00 AM

தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கு ரூ.4 லட்சம் வரை கட்டணம் வசூல்: புகார் வந்தால் நடவடிக்கை - சிங்காரவேலு கமிட்டி எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜிக்கு ரூ.4 லட்சம் வரை கட்டணம் வசூலிக் கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்து ஆதாரத்தோடு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு கமிட்டி அறிவித்துள்ளது.

கல்விக்கட்டண நிர்ணயக்குழு

தனியார் சுயநிதி பள்ளிகளில் அதிகப்படியான கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதை கட்டுப் படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஏ.சிங் காரவேலு தலைமையில் தனியார் பள்ளி கல்விக்கட்டண நிர்ணயக்குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்த குழு, பள்ளியின் தரத்துக்கும் அதிலுள்ள வசதிகளுக்கும் ஏற்ப தனித்தனியே கட்டணத்தை நிர்ண யித்தது. அதற்கு அரசும் ஒப்புதல் வழங்கியது. இந்த கட்டண விவரங்களை அனை வரும் அறிந்துகொள்ளும் வண்ணம் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

பெற்றோர் புலம்பல்

எனினும் கடந்த ஆண்டு சென்னை நகரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் கமிட்டி அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, ஒருசில பள்ளிகளுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன் 7 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை சூடுபிடித்துள்ளது. சென்னையில் உள்ள முன்னணி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் சேர்க்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ 4 லட்சம் வரை நன்கொடை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தங்கள் குழந்தைகளுக்கு இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் தனியார் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை கொடுப்பதற்கும் சில பெற்றோர்கள் தயாராக உள்ளதால் நன்கொடை முறையை தடுக்க முடியவில்லை என்று பெற்றோர்கள் புலம்புகின்றனர்.

புகார் வந்தால் நடவடிக்கை

இந்நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆதாரத்தோடு புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படு்ம என்று தனியார் பள்ளி கல்விக்கட்டண நிர்ணயக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுமோ என்று பெற்றோர்கள் அச்சப்படுவது பள்ளி நிர்வாகத்தினருக்கு வசதியாகப் போய்விடுகிறது.

எனினும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதை தடுத்து நிறுத்த பெயரளவில் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எங்கு புகார் செய்ய வேண்டும்?

தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக்குழுவான நீதிபதி எஸ்.ஏ. சிங்காரவேலு கமிட்டி அலுவலகம் சென்னை கல்லூரிச்சாலையில் டி.பி.ஐ.வளாகத்தில் இயங்கி வருகிறது. தனியார் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் உரிய ஆவணங்களுடன் (பணம் செலுத்தியதற்கான ரசீது, கட்டணம் தொடர்பாக பள்ளியின் தகவல் குறிப்பு) நேரில் அல்லது தபாலில் அல்லது மின்னஞ்சல் (psfdcdpi@gmail.com) மூலமாக புகார் செய்யலாம். தொலைபேசி எண்:044-28251688.

பெற்றோர் கருத்துகளை அனுப்பலாம்

தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக மாணவ-மாணவிகளின் பெற்றோர் “தி இந்து” அலுவலகத்துக்கு feedback@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துகளை அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x