Published : 17 Apr 2014 11:40 AM
Last Updated : 17 Apr 2014 11:40 AM

3 ஆண்டு துன்பங்களை எண்ணி பாருங்கள்: திமுக தலைவர் கருணாநிதி ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பொதுமக்கள் பட்ட துன்பங்களை எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து கருணாநிதி புதன்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2006 முதல் 2011 வரையிலான ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகளையும், அதிமுக-வால் கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் பட்ட துன்பங்களையும் எண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டும். மேலும் பெரும்புதூர் வைஷ்ணவ தலமாக விளங்குகிறது. வைஷ்ணவ தலங்களுக்காக ஜெகத்ரட்சகன் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்துள்ளார். அதனால் அவருக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தொண்டர்கள் ஏமாற்றம்

இந்த மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருணா நிதி இதுவரை பிரச்சாரம் செய்ய வில்லை. புதன்கிழமை முதன் முதலாக பெரும்புதூரில் ஜெகத்ரட்சகனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருந்தார். இதை யொட்டி காலை 11 மணி முதலே ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். அவரது பேச்சைக் கேட்க, கடும் வெயிலை யும் பொருட்படுத்தாமல் ஆர்வத் துடன் பல மணி நேரமாக காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில் மாலை சுமார் 6.15 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே பிரச்சார வாகனத்தை நிறுத்தி உள்ளே இருந்தபடியே கருணாநிதி 4.30 நிமிடங்கள் மட்டுமே கட்சி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து பேசினார்.

பின்னர் வேலூரில் நடைபெறும் பிரச்சார கூட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார். இதனால் பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். முன்னதாக அவருக்கு திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அவரது பேச்சை கேட்பதற்கு ஏராளமானோர் திரண்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x